Uncategorized
வகுப்பறையா..? சித்ரவதைக்கூடமா..? 8-ம் வகுப்பு மாணவனை முட்டிப்போட வைத்து வேப்பங்கம்பால் தாக்கிய ஆசிரியர்… கதறியோடிய தந்தை எடுத்த அதிரடி முடிவு..!!
நெல்லை அருகே பள்ளிக்கூடத்தில் மாணவரை முட்டிப்போட வைத்து வேப்பங்கம்பால் சரமாரியாக ஆசிரியர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை அடுத்த முறப்பநாடு அருகே உள்ள அனவரதநல்லூர் மேலத்தெருவை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் பவின். இவர் அதே ஊரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் பள்ளியில் வகுப்பறை நடைபெற்றபோது, பவின் இயற்கை உபாதை கழிக்க ஆசிரியரிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் ஆசிரியர் அனுமதி கொடுக்க மறுத்துவிட்ட நிலையில், வகுப்பு முடிந்ததும் பவின் அவசரமாக கழிவறைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
இதனை பார்த்த ஆசிரியர், மாணவனை அழைத்து முட்டிப்போட வைத்ததுடன் வேப்பங்கம்பால் பின்னங்கால், கை மற்றும் முதுகு உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மாணவனுக்கு உடலின் பல்வேறு பகுதிகளில் வீக்கம் உருவாகி வலி ஏற்பட்டது. பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவன், நடந்த சம்பவம் குறித்து தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவரது தந்தை, முறப்பநாடு போலீஸ் நிலையத்தில் ஆசிரியர் மீது புகார் அளித்தார். பின்னர் காயமடைந்த தனது மகனை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறார்.
இதுகுறித்து மாணவனின் தந்தை மாரியப்பன் கூறுகையில், “பள்ளிக்கூடத்தில் இயற்கை உபாதை கழிக்க செல்வது குற்றமா? எனது மகன் வகுப்பறை முடிந்த பிறகுதான் கழிவறைக்கு சென்றார். இருந்தபோதும் ஆசிரியர் அனைத்து மாணவர்கள் முன்னிலையில், முட்டிப்போட வைத்து கடுமையாக தாக்கி உள்ளார். இதனால் கை, கால், தொடை உள்ளிட்ட பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டு வலி தாங்க முடியாமல் எனது மகன் அவதிப்பட்டு வருகிறார். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சில ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு வந்து புகாரை வாபஸ் பெறுமாறு வற்புறுத்துகின்றனர். ஆனால் நான் புகாரை வாபஸ் பெறப்போவதில்லை. எனது மகனை தாக்கிய ஆசிரியர் மீதும், சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தவறிய தலைமை ஆசிரியர் மீதும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
