LATEST NEWS
“வாக்குகளை வித்துட்டு கட்சி மாறுன பச்சோந்தி” இங்கே இருந்து ஓடு ஓடு… மின்வெட்டுப் போராட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற தவெக இசக்கி சுப்பையாவை விரட்டியடித்த மக்கள்..!!
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே முதலியார்பட்டி, கோட்டைவிளைப்பட்டி மற்றும் அகஸ்தியர் புரம் உள்ளிட்ட 5 கிராமங்களில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டைக் கண்டித்தும், பொதுமக்கள் நேற்று இரவில் கைகளில் தீப்பந்தம் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த அம்பாசமுத்திரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த முயன்றார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர் இசக்கி சுப்பையா இதனால் ஆத்திரத்தில் இருந்த பொதுமக்கள், “எங்கள் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று விட்டு சுயநலத்திற்காகப் பதவியை துறந்து விட்டீர்கள்; தொகுதிக்கு ஒரு பிரச்சினை என்றால் தீர்த்து வைக்க எங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லை” என்று கூறி அவரிடம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, அங்கிருந்தவர்கள் அவரை “ஓடு ஓடு” என்று முழக்கமிட்டு விரட்டியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே, அவர் தனது ராஜினாமா கடிதத்தைத் திரும்பப் பெற அனுமதி கோரி சபாநாயகரிடம் மனு அளித்த விவகாரம் ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தற்போது இந்தத் தொகுதியில் வரவிருக்கும் இடைத்தேர்தலில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதிமுகவினர் இவரை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மக்களின் வாக்குகளை அவமதித்து விட்டுப் பதவி ஆசைக்காக கட்சி மாறிய பச்சோந்திகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று சமூக வலைதளங்களிலும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன
