LATEST NEWS
“மாணவிகளின் முதுகைத் தடவியது பாலியல் குற்றமல்ல”.. அது வெறும் கண்டிப்பு தான்… ஆசிரியர் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!
மேற்குவங்க மாநிலம் அலிபுர்துவாரில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றி வந்த புவியியல் ஆசிரியர் பாஸ்கர் பால், வகுப்பறையில் மாணவிகளின் முதுகைத் தடவியதாகவும், இடுப்புப் பகுதியில் கிள்ளியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மாணவிகளின் புகாரைத் தொடர்ந்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவைக் கொல்கத்தா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உஜ்ஜல் பூயான் மற்றும் அதுல் எஸ். சந்தூர்கர் அடங்கிய அமர்வு , ஆசிரியரின் செயல்பாட்டில் எவ்வித பாலியல் நோக்கமும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளனர். மாணவிகள் பாடங்களைக் கவனிக்காதபோதும், வரைபடங்களைக் கொண்டுவராதபோதும் ஒரு பொறுப்பான ஆசிரியராக அவர் இன்னும் நிதானமாகக் கையாண்டிருக்கலாம் என்றும், அவரது செயல் வெறும் உடல்ரீதியான தண்டனையை மட்டுமே வெளிப்படுத்துவதாகவும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
பாலியல் நோக்கம் இன்றி ஒரு ஆசிரியர் மாணவர்களைக் கண்டிப்பது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாகாது என்று சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், பாஸ்கர் பால் மீதான போக்சோ வழக்கையும், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும் முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், இத்தகைய ஆதாரமற்ற போக்சோ வழக்குகள் ஒரு ஆசிரியரின் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் குடும்பத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்றும் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது
