LATEST NEWS
“எங்கே எங்களோட முட்டை?” தட்டைத் தட்டி பள்ளியை அலறவிட்ட மாணவர்கள்… மதிய உணவால் வெடித்த பரபரப்பு போராட்டம்..!!
பீகார் மாநிலம் மேற்கு சாம்பாரான் மாவட்டத்தில் உள்ள பைரியா சந்தையில் இயங்கி வரும் அரசு நடுநிலைப்பள்ளியில், மதிய உணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படாததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கமான உணவுப் பட்டியலின்படி வெள்ளிக்கிழமைகளில் மாணவர்களுக்கு அவித்த முட்டை வழங்கப்பட வேண்டும். ஆனால், மாணவர்கள் சாப்பிட அமர்ந்தபோது அவர்களது தட்டில் முட்டை பரிமாறப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள், பள்ளி வளாகத்திற்குள்ளேயே தங்களது உணவுக் தட்டுகளைத் தரையில் தட்டி, வீசி எறிந்து பலத்த எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளி வளாகத்தில் தொடங்கிய இந்த எதிர்ப்புக் குரல் அதோடு நின்றுவிடாமல், மாணவர்கள் திரளாகச் சென்று அருகில் உள்ள வட்டார வள மைய அலுவலகத்தின் முன்பும் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது தாங்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் உணவின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், இதுகுறித்து ஆசிரியர்களிடமோ அல்லது நிர்வாகத்திடமோ புகார் அளித்தால், பள்ளியை விட்டுப் பெயரை நீக்கி விடுவதாக மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் மாணவர்கள் குற்றஞ்சாட்டினர். புத்தகம், பேனா பிடித்துக் படிக்க வேண்டிய வயதில் மாணவர்கள் தங்களது உணவு உரிமைக்காக வீதிக்கு வந்து போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாகத் தலையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களிடமும் அவர்களது பெற்றோர்களிடமும் பேசிய அவர், இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும், விசாரணையில் முறைகேடோ அல்லது அதிகாரிகளின் அலட்சியமோ கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து மதிய உணவுத் திட்டத்தைக் கண்காணிக்கும் முறை மற்றும் உணவின் தரம் குறித்துப் பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
