CRIME
“இளநீரில் சயனைடு விஷம் கலந்து கொடுத்தேன்” 25 கோடி ரூபாய் சொத்துக்காக… துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளரின் பகீர் வாக்குமூலம்..!!
சௌஜன்யாவின் 25 கோடி ரூபாய் சொத்துக்காக அவரைத் திருமணம் செய்யத் திட்டமிட்டேன். இதற்காக அவரது தந்தை சம்மதிக்காததால், சௌஜன்யாவின் கணவர் ஜெகதீஸ்வர் ரெட்டிக்கு இளநீரில் சயனைடு விஷம் கலந்து கொடுத்துக் கொலை செய்தேன் என்று துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் சாதிக் கான் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மூன்று நாட்கள் நடந்த தீவிர விசாரணைக்குப் பிறகு அவர் இந்தக் கொடூரக் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து ராஜ் உதவிப் பொறியாளர் கே. நூகா ராஜு, அவரது மனைவி மீனா மற்றும் மகள் சௌஜன்யா ஆகியோரின் ஒட்டுமொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பின்னணியிலேயே இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஜெகதீஸ்வர் ரெட்டியின் மரணத்திற்குப் பிறகு, சாதிக் கான் அந்தக் குடும்பத்தினரைத் தொடர்ந்து மிரட்டி, பணம் பறித்து, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார்.
சாதிக் கானின் தொடர் மிரட்டல்கள், பிளாக்மெயில் மற்றும் சொத்துக்களைப் பறிக்கும் முயற்சிகளைத் தாங்க முடியாததால், வேறு வழியின்றி அந்த முழு குடும்பமும் கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது. இந்தத் தற்கொலை வழக்கு தொடர்பாக உபி-யில் கைது செய்யப்பட்ட சாதிக் கானிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சொத்துக்காகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தச் சதி மற்றும் கொலைக் குற்றம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
