LATEST NEWS
“கள் போதைப்பொருள்னு நிரூபிச்சா இன்னோவா கார் பரிசு” கள்ளுக்கான தடையை நீக்கக் கோரி விவசாயிகள் சங்கச் செயலாளர் நல்லசாமி அதிரடி சவால்..!!
‘கள்’ என்பது போதைப் பொருள் கிடையாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் நல்லசாமி, அதனைப் போதைப் பொருள் என யாராவது அறிவியல் பூர்வமாக நிரூபித்தால் அவர்களுக்கு ‘இன்னோவா கார்’ பரிசாக வழங்கப்படும் என்று அதிரடிச் சவால் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் நீண்ட காலமாக நீடித்து வரும் கள்ளுக்கான தடையை நீக்கக் கோரி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அவரது இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசால் அமைக்கப்பட்ட கோகுல்தாஸ் விசாரணை ஆணையம், தமிழ்நாட்டில் கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என்று அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளதாக நல்லசாமி சுட்டிக்காட்டியுள்ளார். கள்ளுக்கு அனுமதி அளிப்பதன் மூலம் மட்டுமே கிராமப்புறங்களில் உயிர்களைப் பறிக்கும் கள்ளச்சாராயப் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்றும், இது தென்னை மற்றும் பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என்றும் அந்த ஆணையத்தின் அறிக்கையைக் குறிப்பிட்டு அவர் பேசியுள்ளார்.
கடந்த கால அரசாங்கங்கள் விவசாயிகளின் கோரிக்கைகளைப் புறக்கணித்து வந்த நிலையில், தற்போதைய அரசு விரைவில் கள்ளுக்கான தடையை நீக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்ற முழு நம்பிக்கை தனக்கு இருப்பதாக நல்லசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இயற்கை உணவான கள்ளை, செயற்கை மதுபானங்களோடு ஒப்பிட்டுத் தடை செய்வது நியாயமற்றது என்றும் அவர் இந்த சந்திப்பில் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
