LATEST NEWS
“சர்க்கரை நோய் வராம தடுக்க விலையை ஏத்துறீங்களா?” ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வுக்கு முதலமைச்சர் விஜய்யை கிழித்துத் தொங்கவிட்ட எடப்பாடி பழனிசாமி..!!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஆவின் பால் பொருட்களின் விலையைக் கடுமையாக உயர்த்தியுள்ள தவெக அரசிற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். தமிழக அரசின் ஆவின் நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படும் நெய், வெண்ணெய், தயிர் மற்றும் இனிப்பு வகைகளின் விலைகள் கணிசமாக உயர்த்தப்பட்டு, அக்டோபர் 28 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை திருத்தமானது தற்போதைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் விலை உயர்வு நடவடிக்கை ஆகும்.
இந்த திடீர் விலை உயர்வு குறித்து சாடியுள்ள எடப்பாடி பழனிசாமி, தவெக அரசு தற்பொழுது ஒரு சினிமாவில் வரும் கார்ப்பரேட் வில்லனைப் போலச் செயல்படுவதாக விமர்சித்துள்ளார். மக்கள் பண்டிகைக் காலத்தில் இனிப்புகள் மற்றும் நெய்யை அதிகமாக வாங்குவார்கள் என்பதைச் சரியான நேரமாகப் பார்த்து, லாபம் சம்பாதிக்கும் நோக்கில் அரசு இந்த விலையேற்றத்தைச் செய்துள்ளது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், நடிகராக இருந்தபோது தீபாவளிக்கு வெளியாகும் தனது படங்களின் டிக்கெட்டுகளை “பிளாக் டிக்கெட்” ஆக விற்ற பழக்க தோஷத்தில், தற்போது தீபாவளி நேரத்தில் ஆவின் இனிப்புகளின் விலையையும் முதலமைச்சர் விஜய் உயர்த்திவிட்டாரோ என்று கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இதுமட்டுமின்றி, இந்த விலை உயர்வினை நியாயப்படுத்துவதற்காக, “அதிகம் இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும், அதைத் தடுக்கவே இந்த வெற்றி தீபாவளி திட்டம்” என்று செய்தியாளர் சந்திப்பில் மழுப்பிப் பேசுவதற்கு எந்த அமைச்சரை முதலமைச்சர் விஜய் நியமிக்கப் போகிறார் என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். பொதுமக்கள் தீபாவளிப் பண்டிகையை எவ்வித கூடுதல் பொருளாதாரச் சுமையும் இன்றி மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக, ஆவின் பொருட்களின் மீதான இந்த அதிரடி விலை உயர்வை தவெக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
