LATEST NEWS
ஜாக்கிரதையா இருங்க CM சார்… உங்களுக்கு ‘ஆப்பு’ அடிக்க போறதே இந்த 2 பேர் தான்.. இபிஎஸ் விடுத்த எச்சரிக்கை..!!
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு செயல்பட்டு வரும் சூழலில், சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவருக்குக் கடுமையான அரசியல் எச்சரிக்கை விடுத்துள்ளார். தவெகவில் முக்கியப் பொறுப்புகளில் உள்ள ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல்குமார் ஆகிய இருவரால்தான் முதலமைச்சர் விஜய்க்கு அரசியல் ரீதியாக ‘ஆப்பு’ வரப்போகிறது என்று அவர் காரசாரமாகக் குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “முதலமைச்சர் விஜய் அவர்களே, உங்களுக்கு ஆப்பு அடிக்கப் போவதே ஆதவ் அர்ஜுனாவும், நிர்மல்குமாரும்தான்; ஜாக்கிரதையாக இருந்துக்கோங்க” என்று எச்சரித்தார். மேலும், ஆதவ் அர்ஜுனா கடந்த 20 வருடங்களாக விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்தாரா என்று கேள்வி எழுப்பிய அவர், எப்படியாவது ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிட வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் அவர்கள் தவெகவுக்குப் போனதாகவும், அதிர்ஷ்டவசமாக அவர்கள் வெற்றி பெற்றுவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
அதிமுகவை தவெகவினர் குறைத்து மதிப்பிட்டு வருவதாகக் குற்றம்சாட்டிய இபிஎஸ், அதிமுகவை எந்தக் கொம்பனாலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்று சூளுரைத்தார். தவெகவின் பொதுச்செயலாளர் பதவி என்பது அதிமுகவின் கிளைச் செயலாளர் பதவிக்கு மட்டுமே சமமானது என்று சாடிய அவர், தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு பேசிவிட்டு, தற்போது ஆட்சியைப் பிடித்த பிறகு அந்தரப்பல்டி அடிக்கும் அரசியலை விஜய் செய்வதாகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
