LATEST NEWS
“கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் என்னை தள்ளிவிட்டார்” ராகுல்காந்தி மீது பெண் பத்திரிக்கையாளர் பரபரப்பு குற்றசாட்டு..!!
டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி போராட்டத்தின் போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தம்மைத் தள்ளிவிட்டதாக 3 மாத கர்ப்பிணி பெண் பத்திரிகையாளர் ரிச்சா பராஷர் அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தை செய்தி சேகரிக்கச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கூட்ட நெரிசலில் ராகுல் காந்தி தனது கையைப் பிடித்து ஆக்ரோஷமாகத் தள்ளியதால் தான் கீழே விழுந்துவிட்டதாகவும், அப்போது தனது கைபேசி முற்றிலும் உடைந்து மைக் ரிசீவர் கழன்று விழுந்துவிட்டதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். தான் கீழே விழுந்தபோது உதவி செய்யாமல், தனது அலறல் சத்தம் வெளியே கேட்காதவாறு அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் ‘ராகுல் காந்தி ஜிந்தாபாத்’ என முழக்கமிட்டு மறைக்க முயன்றதாக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசும் ராகுல் காந்தியின் உண்மை முகம் இதுதான் எனச் சாடியுள்ளது. எனினும், காங்கிரஸ் கட்சி இக்குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளதுடன், இது பாஜகவின் திட்டமிட்ட அரசியல் பிரச்சாரம் என்று விளக்கம் அளித்துள்ளது. சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட காணொளிகளில் ராகுல் காந்தி வேண்டுமென்றே தள்ளிவிட்டதற்கான எந்தவொரு தெளிவான ஆதாரமும் இல்லை என்றும், அரசியல் காரணங்களுக்காக இந்த விவகாரம் ஜோடிக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் தரப்பில் வாதிடப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர், தம்மீதான தாக்குதலைப் பதிவு செய்யப்பட்டுள்ள காணொளியைப் பார்த்தாலே உண்மை தெளிவாகத் தெரியவரும் என்று உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார்.
