LATEST NEWS
இதை மட்டும் செய்யலைனா “தினமும் 3 மணிநேரம் பவர் கட் வரும்”.. வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்குவது ஏன்? – புள்ளிவிவரத்துடன் பட்டியலிட்ட அமைச்சர் நிர்மல்குமார்..!!
“ஒரு யூனிட் மின்சாரத்தை வெளிச்சந்தையில் ரூ.35-க்கு கொள்முதல் செய்வது ஏன்?” என்று தவெக அரசுக்கு திமுகவின் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் விரிவான விளக்கமளித்துள்ளார். இந்த விவாதத்தில், தவெக அரசு டான்ஜெட்கோ மூலமாக உள்நாட்டு உற்பத்தியைக் குறைத்துவிட்டு, வெளிச்சந்தையிலும் ஆந்திராவிலும் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவதாக செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். முந்தைய திமுக ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.20-க்கு கொள்முதல் செய்யப்பட்டபோது எதிர்க்கட்சிகள் எதிர்த்த நிலையில், தற்போது ரூ.35-க்கு வாங்குவது ஏன் என்றும், திமுக ஆட்சியில் மின்தேவை அதிகரித்தபோதும் மின்தடை ஏற்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள தவெக அமைச்சர் நிர்மல்குமார், மத்திய தொகுப்பிலும் மின்சாரம் கிடைக்காத காரணத்தினாலேயே, யூனிட் ஒன்றுக்கு ரூ.35 கொடுத்து எரிவாயு (GAS) மின்சாரத்தை வாங்க வேண்டிய கட்டாய நிலை தவெக அரசுக்கு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், என்.எல்.சி (NLC) மூலம் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய 1800 மெகாவாட் மின்சாரம் தங்களுக்கு முறையாகக் கிடைக்கவில்லை என்றும், இந்தச் சூழலில் வெளிச்சந்தையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்யாவிட்டால் மாநிலத்தில் தினசரி 2 முதல் 3 மணி நேரம் வரை கடுமையான மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மாநிலத்தில் நிலவும் தற்காலிக மின்தட்டுப்பாட்டைச் சமாளிப்பதற்காக, வெறும் 15 நாட்களுக்கு மட்டுமே இந்த அவசரக் கொள்முதல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த 15 நாட்களுக்கு மட்டும் யூனிட் ரூ.35 என்ற விலையில், மொத்தம் 1500 மெகாவாட் மின்சாரத்தை வெளிச்சந்தையில் கொள்முதல் செய்ய தவெக அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மின்சாரக் கொள்முதல் விலை உயர்வு தொடர்பாகத் தமிழ்நாட்டில் திமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே வெடித்துள்ள இந்த அரசியல் மோதல் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
