LATEST NEWS
“உதயநிதி பேசுனதை உங்க வீட்ல போட்டு காட்டுங்க..!” அமைச்சர் நிர்மல் குமார் வைத்த அதிரடி சவால்.. தமிழக அரசியலில் வெடித்த பெரும் புயல்..!!
தஞ்சாவூர் திமுக ஆர்ப்பாட்டத்தில் பெண்களை இழிவுபடுத்திப் பேசியதாகத் தவெக மகளிர் அணியினர் அளித்த புகாரின் பேரில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் தஞ்சாவூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்துச் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், “உதயநிதி ஸ்டாலின் பேசியதை திமுகவினர் தங்களது வீட்டில் போட்டுக் காட்டட்டும். காவிரி மற்றும் மேகதாது விவகாரம் பற்றிப் பேசத் தெரியாவிட்டால் அமைதியாக இருந்திருக்கலாம்; அதை விட்டுவிட்டுப் பெண்களைப் பற்றி அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசுவதை எந்தக் காலத்திலும் ஏற்க முடியாது” என்று சாடினார்.
மேலும், மனதளவில் இவ்வளவு வக்கிரம் கொண்டவருக்குச் சட்டமன்ற உறுப்பினராகக் கூடத் தகுதி இல்லை என்று குறிப்பிட்ட நிர்மல் குமார், காவல்துறைக்குக் கிடைத்த புகாரின் அடிப்படையில் சட்டப்பூர்வமான நேர்மையான நடவடிக்கையே எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தவறுதலாகத் தன் பேச்சு திரிக்கப்பட்டுள்ளதாக உதயநிதி விளக்கம் அளித்துவரும் நிலையில், அவரது கைதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர் வீதியில் இறங்கிப் போராடி வருவதால் பரபரப்பு நிலவுகிறது.
இதேவேளையில், தவெக அரசு தன் தவறை மறைக்கவே உதயநிதியைக் கைது செய்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததற்குப் பதிலளித்த நிர்மல் குமார், “முந்தைய காலத்தில் ஜெயலலிதா இருந்திருந்தால் என்ன அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பாரோ, அதையேதான் தற்போது முதலமைச்சர் விஜய்யும் செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமிதான் பொய்க்கால் குதிரை போல திமுகவின் பின்னணியில் ஒளிந்துகொண்டு செயல்படுகிறார்” என்று கடுமையாக விமர்சித்தார்.
