LATEST NEWS
“பழங்குடியினர், சிறுபான்மையினர் நடத்தப்படும் விதம் கவலை அளிக்கிறது” இந்தியாவில் மனித உரிமை மீறல்களா..? இந்தியாவை விமர்சித்த ஐநா சபை..!!
இந்தியாவில் உள்ள பழங்குடியின மக்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், வங்காள மொழி பேசும் இஸ்லாமியர்கள் மற்றும் பிற நலிவடைந்த பிரிவினருக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாகுபாடுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புக்குழு கவலை தெரிவித்துள்ளது. இனப்பாகுபாட்டை ஒழிப்பதற்கான ஐநா குழு , இந்த விவகாரத்தில் கடுமையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும், பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் இந்தியாவை வலியுறுத்தியுள்ளது.
2007-ஆம் ஆண்டிற்குப் பிறகு கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் கழித்து, இந்த மாத தொடக்கத்தில் தான் இந்தியா இந்த ஐநா குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், சித்திரவதைகள், தன்னிச்சையான காவலில் வைப்பு, அதிகப்படியான பலப்பிரயோகம் மற்றும் பாலியல் வன்முறைகள் போன்ற கடுமையான மனித உரிமை மீறல் புகார்கள் குறித்து ஐநா குழு தனது தீவிர கவலையை பதிவு செய்துள்ளது. ரோஹிங்கியாக்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடம் தேடுவோரைக் குறிவைத்து நடத்தப்படும் அடையாளச் சோதனைகள் தன்னிச்சையான கைதுகளுக்கு வழிவகுப்பதாகக் கூறியுள்ள குழு, வெறுப்புப் பேச்சுகள் மற்றும் வெறுப்புக் குற்றங்களை இந்தியா அவசரமாகக் கையாள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த ஐநா குழுவின் பரிந்துரைகள் சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தாது என்றாலும், சர்வதேச அளவில் இது ஒரு நாட்டின் நற்பெயரை பாதிக்கக்கூடியது.மறுபுறம், இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள இந்தியக் குழு, இந்தியாவின் பன்முகத்தன்மை, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் நாட்டின் பரந்த தன்மையைக் சுட்டிக்காட்டியுள்ளது. அனைத்து இந்தியர்களுக்கும் சமத்துவம், கண்ணியம் மற்றும் வாய்ப்புகளை உறுதி செய்வதற்கான பயணத்தை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக ஐநா கூட்டத்தில் இந்தியத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
