LATEST NEWS
மத்திய கிழக்கில் பதற்றம்….! குவைத், பஹ்ரைன் மீது ஈரான் ஏவுகணை வீச்சு…. அலறிய சைரன்கள்…!
மத்திய கிழக்கு ஆசியாவில் ஈரான் தனது அண்டை நாடுகளான குவைத் மற்றும் பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ முகாம்களைக் குறிவைத்து 7 அதிநவீன ஏவுகணைகளை ஏவி நடத்திய தாக்குதல் உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திடீர் வான்வழித் தாக்குதலால் இரு நாடுகளிலும் போர்க்கால எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டதால் பொதுமக்கள் தங்குமிடங்களை நோக்கிப் பயத்துடன் ஓடினர். முன்னதாக ஹார்முஸ் நீரிணையில் வந்த ஈரானிய ட்ரோன்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதற்குப் பழிவாங்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், குவைத் வான் பாதுகாப்புப் படையினர் இந்த ஏவுகணைகளை நடுவானிலேயே தடுத்து அழித்துள்ளனர்.
பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5-வது கடற்படைத் தலைமையகத்தைத் தரைமட்டமாக்கிவிட்டதாக ஈரானியப் படை அறிவித்த போதிலும், அதனை அமெரிக்காவின் சென்ட்காம் (CENTCOM) நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஈரான் ஏவிய ஏவுகணைகளில் பெரும்பாலானவை தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டதாகவும், அமெரிக்க வீரர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் சென்ட்காம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இருப்பினும், இதற்கு சில நாட்களுக்கு முன்பு குவைத் வான்நிலையத்தில் ஈரானிய ட்ரோன் நடத்திய தாக்குதலில் இந்தியத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது நடந்துள்ள இந்த ஏவுகணை வீச்சு அப்பகுதியில் கடுமையான போர்ச் சூழலை உருவாக்கியுள்ளது.
