LATEST NEWS
யாரு பாஸ்-னு அவருக்குத் தெரியும்…! டிரம்ப் கொடுத்த கெத்தான ஸ்டேட்மென்ட்…! நேதன்யாகுவின் வருகை குறித்து டிரம்ப் அதிரடி பேச்சு..!!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஊடக நேர்காணல் ஒன்றில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தன்னைச் சந்திக்க வெள்ளை மாளிகைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்து கூற நேதன்யாகு தொலைபேசியில் அழைத்தபோது இந்தச் சந்திப்பு குறித்து இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்தச் சந்திப்பைப் பற்றிப் பேசிய டிரம்ப், தங்களுக்குள் நல்ல நட்பு இருந்தாலும், தங்களில் ‘பாஸ்’ யார் என்று நேதன்யாகுவுக்கு நன்றாகவே தெரியும் என்று தனது வழக்கமான அதிரடி பாணியில் தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதில் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் வேளையில் இந்தச் சந்திப்பு அமையவுள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வெடித்த போரை நிறுத்த டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். டிரம்ப் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு புதிய பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ள நிலையில், லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளுமாறு நேதன்யாகுவிற்கு டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். நேதன்யாகுவின் சில பிடிவாதமான முடிவுகளால் அமைதிப் பேச்சுவார்த்தை பாதிக்கப்படுவதாக டிரம்ப் கருதுகிறார்.
துருக்கியில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டிற்குப் பிறகு, அடுத்த வாரத்திலோ அல்லது அதற்கு அடுத்த வாரத்திலோ இந்த வெள்ளை மாளிகை சந்திப்பு நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் அக்டோபர் மாதம் இஸ்ரேலில் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், தற்போதைய கருத்துக்கணிப்புகளில் நேதன்யாகு பின்தங்கியுள்ளார். எனவே, இத்தகைய இக்கட்டான அரசியல் சூழ்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்புடன் நடக்கும் இந்த நேரடி சந்திப்பு நேதன்யாகுவிற்கு அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.
