LATEST NEWS
அரசியல் விளம்பரமா..? பொது நிகழ்ச்சிக்கு ஏன் கைக்குழந்தையோடு வாறீங்க..? த.வெ.க எம்.எல்.ஏ பல்லவியை விமர்சித்த கார்த்தி சிதம்பரம்..!!
சென்னையில் நடைபெற்ற பிரதமர் பங்கேற்ற அரசு விழாவில், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) திரு.வி.க நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பல்லவி தனது கைக்குழந்தையுடன் பங்கேற்றது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. சென்னை ஐஐடி-யில் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில் அவர் தனது குழந்தையை கையில் ஏந்தியபடி கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி அரசியல் மற்றும் பொது வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “பணியிடங்களில் குழந்தைகளுக்கான காப்பகம் அமைப்பது, மகப்பேறு விடுப்பு மற்றும் தந்தைக்கான விடுப்புகள் வழங்குவது ஆகியவற்றை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். ஆனால், ஒரு கைக்குழந்தையைத் தொடர்ந்து இது போன்ற பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வது அரசியல் விளம்பரத்திற்காகவும், பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் செய்யப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது” என்று விமர்சித்துள்ளார்.
மேலும், “இதுபோன்ற முக்கிய அரசு மற்றும் பொதுப் பணிகளுக்குக் குழந்தைகளைத் தொடர்ந்து அழைத்து வருவதைத் தவிர்ப்பது குறித்து, தமிழக முதலமைச்சர் விஜய் உரிய ஆலோசனைகளை வழங்குவார் என நம்புகிறேன்” என்றும் கார்த்தி சிதம்பரம் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஒரு பெண் மக்கள் பிரதிநிதி தனது குழந்தையுடன் பணிக்கு வருவதை ஆதரிக்க வேண்டுமா அல்லது அதனை விளம்பரமாகப் பார்ப்பதா என்ற நோக்கில் இந்த விவகாரம் தற்போது இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
