“வியாதி மக்களுக்கு.. லாபம் பாஜகவுக்கு..!” 400 கோடி நன்கொடை விவகாரத்தில் மனோ தங்கராஜ் அதிரடி சாடல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வியாதி மக்களுக்கு.. லாபம் பாஜகவுக்கு..!” 400 கோடி நன்கொடை விவகாரத்தில் மனோ தங்கராஜ் அதிரடி சாடல்..!!

Published

on

இந்தியாவில் நீரிழிவு நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்யும் ஃபார்மா நிறுவனங்கள் பாஜகவிற்கு ரூ.400 கோடிக்கும் அதிகமாக நன்கொடை வழங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம்சாட்டியுள்ளார். அதேவேளையில், இந்தியாவில் வீட்டுக்கு இரண்டு நீரிழிவு நோயாளிகள் இருக்கும் நிலை உருவாகியுள்ளது என்றும், இந்த மருந்து நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையைப் பெருக்க மத்திய பாஜக அரசு Production Linked Incentive திட்டம் மூலமாக ரூ.6,000 கோடி மானியம் வழங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மறுபுறம், மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களைக் கவர விலையுயர்ந்த அன்பளிப்புகள், வெளிநாட்டுச் சுற்றுலாக்கள் மற்றும் இலவச மருந்துகளை அள்ளி வீசுவதாகவும், சன் பார்மா, யு.எஸ்.வி, டொரண்ட், லூபின் போன்ற நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி லாபம் ஈட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சாதாரண நீரிழிவு நோயாளி ஒருவர் மாதந்தோறும் சராசரியாக ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை மருத்துவச் செலவு செய்யும் நிலையில், நோயாளிகள் செலவு செய்யும் பணத்தில் இருந்தே பாஜக ரூ.400 கோடிக்கு மேல் கட்சி நிதி பெற்றுள்ளதாக மனோ தங்கராஜ் சாடியுள்ளார். நோயாளி தன் உயிரைக் காக்கச் செலவிடும் தொகையில் பாஜக பங்கு கேட்பது கீழ்த்தரமானது என்றும், எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்ற எண்ணத்தில் பாஜக கொள்ளையடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார். 50 வயதைக் கடந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் மருந்து உட்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ள சூழலில், நீரிழிவு நோயை மக்களின் பாதிப்பாகப் பார்க்காமல் வசூல் வாய்ப்பாகவே மத்திய அரசு அணுகுகிறது என்றும் சாடியுள்ளார்.

Advertisement

இந்தியா போலியோ, அம்மை போன்ற நோய்களுக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றிருந்தாலும், நீரிழிவு நோயைப் பற்றிய சிந்தனை பாஜக அரசிடம் இல்லை என்று அவர் கூறியுள்ளார். பிரதமர் மோடியின் சகாக்கள் மக்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை என்ற சிந்தனையோடு அதிகாரத்தைத் தக்கவைக்கப் பிரிவினையை மட்டுமே தூண்டிவிட்டு வருகின்றனர் என்றும் அவர் சாடியுள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21-ன் கீழ் ” சுகாதாரத்திற்கான உரிமை என்பது வாழ் உரிமையின் ஒருங்கிணைந்த பகுதி” என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், ஆளும் அரசுகள் மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள இந்த உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in