LATEST NEWS
“முதல்வர் விஜய் உடனே தலையிடணும்..!” தவெக எம்.எல்.ஏ பல்லவியின் செயலால் கடுப்பான கார்த்தி சிதம்பரம் எம்பி.. பரப்பரக்கும் அரசியல் களம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரான எம்.ஆர். பல்லவி, சட்டமன்றக் கூட்டத்தொடர், பொது மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் என அனைத்து இடங்களுக்கும் தனது கைக்குழந்தையைத் தொடர்ந்து தூக்கிச் செல்வது சமூக ஊடகங்களிலும், அரசியல் வட்டாரத்திலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பல்லவியின் இந்தச் செயலுக்கு இணையவாசிகள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி எழுந்து வரும் நிலையில், இதுதொடர்பாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையான விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளார்.
கார்த்தி சிதம்பரம் தனது பதிவில், பல்லவியின் பெயரைக் குறிப்பிடாமல் அவர் குழந்தையுடன் இருக்கும் வீடியோவை மறுபதிவு செய்து தன் கருத்தைப் பகிர்ந்துள்ளார். பணியிடங்களில் குழந்தைப் பராமரிப்பு மையங்கள் மற்றும் மகப்பேறு விடுப்பு போன்ற கொள்கைகளைத் தான் முழுமையாக ஆதரிப்பதாகக் கூறியுள்ள அவர், கைக்குழந்தையைத் தொடர்ந்து பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வது நடைமுறைத் தேவையைத் தாண்டி, அரசியல் ரீதியாக வெளிச்சம் தேடும் நடவடிக்கையாகவே தோன்றுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இது குறித்து தவெக தலைமை அவருக்குத் தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
