LATEST NEWS
விதிமீறல் எதிரொலி..! 50+ டெண்டர்கள் ரத்து… நகராட்சி நிர்வாகத்துறையின் அதிரடி ஆக்ஷன்..!!!
தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் விதிமீறல்கள் மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக ஒட்டுமொத்தமாக 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்துள்ளது. புதிய டெண்டர்களைக் கோரி, அவற்றைச் சமர்ப்பிப்பதற்கு வெறும் 1 முதல் 4 நாட்கள் மட்டுமே மிகக் குறுகிய கால அவகாசம் வழங்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இத்தகைய விதிமுறை மீறல்கள் தொடர்பாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ரத்து நடவடிக்கையின் கீழ் தமிழகத்தின் பல்வேறு நகராட்சிகளில் உள்ள டெண்டர்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. உடுமலைப்பேட்டை நகராட்சியில் அதிகபட்சமாக 30 டெண்டர்களும், கோத்தகிரி நகராட்சியில் 3 டெண்டர்களும், செங்கம் நகராட்சியில் 2 டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் மணப்பாறை, பெரம்பலூர், திருவள்ளூர் மற்றும் திருவையாறு உள்ளிட்ட பிற நகராட்சிகளிலும் 20-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ரத்து செய்யப்பட்ட டெண்டர்கள் அனைத்தும் பொதுமக்களின் அன்றாடத் தேவைகளுடன் தொடர்புடைய பணிகளாகும். இதில் முக்கியமாக கழிவுநீர் வடிகால் பராமரிப்பு, குடிநீர் இணைப்பு பணிகள், வாரச்சந்தை கடைகளின் ஏலம் மற்றும் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகள் போன்ற பல்வேறு திட்டங்களுக்கான டெண்டர்கள் அடங்கும். தற்போது நிர்வாகக் காரணங்களை முன்னிறுத்தி இவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், இப்பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
