LATEST NEWS
கறைபடிந்த கைகளுக்குப் பதவி உயர்வா..? நோ சான்ஸ்… லிஸ்டுல பேர் இருந்தா மட்டும் பத்தாது, நேர்மை வேணும்..! டி.ஐ.ஜி ஆனந்திற்கு உயர் நீதிமன்றம் கொடுத்த நோஸ் கட்..!!!
தமிழகப் பதிவுத்துறையில் கூடுதல் ஐ.ஜி. பதவி உயர்வுக்கான தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்ட போது, அதில் டி.ஐ.ஜி. வி.ஏ. ஆனந்த் என்பவரின் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால், அதன் பின்னர் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், தமிழக அரசு அவருக்குப் பதவி உயர்வு வழங்க மறுத்தது. இதை எதிர்த்து ஆனந்த் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஒழுங்கு நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பே பட்டியல் தயாரிக்கப்பட்டதால் அவருக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை அதிரடியாக ரத்து செய்தது. பதவி உயர்வுப் பட்டியலில் பெயர் இடம்பெற்றுவிட்டது என்பதற்காக மட்டுமே, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அதிகாரிகள் தங்களுக்குப் பதவி உயர்வு வேண்டும் என்று சட்டப்பூர்வ உரிமையாகக் கோர முடியாது என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
மேலும் தனது தீர்ப்பில் பேசிய நீதிபதிகள் அமர்வு, அரசு நிர்வாகத்தில் கறைபடியாத மற்றும் நேர்மையான அதிகாரிகளுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது. தகுதிப் பட்டியல் தயாரிக்கும் போது குற்றச்சாட்டுகள் இல்லை என்றாலும், உண்மையான பதவி உயர்வு வழங்கப்படுவதற்கு முன்பாக ஊழல் புகார்கள் நிரூபிக்கப்பட்டாலோ அல்லது வழக்குகள் பதியப்பட்டாலோ, அத்தகைய தகுதியற்ற அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு வழங்க மறுத்த தமிழக அரசின் முடிவு முற்றிலும் சரியானது என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
