LATEST NEWS
“இந்தியா எங்கயோ போயிடுச்சு… நாம மட்டும் ஏன் இப்படி..? இதே மாதிரி போனா ஆட்சிக்காலம் முடியுறதுக்குள்ளேயே அரசு கவிழ்ந்துடும்..!” சொந்த அரசுக்கே வார்னிங் கொடுத்த பாக். அமைச்சர்கள்..!!
பாகிஸ்தானில் நிலவும் அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் குறித்து அந்நாட்டு அமைச்சர்களே வெளிப்படையாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியாவுடன் ஒப்பிட்டு பாகிஸ்தானின் தற்போதைய நிலையை பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் விமர்சித்துள்ள நிலையில், அரசு இதே பாதையில் தொடர்ந்தால் ஆட்சிக்காலம் முடிவதற்குள் கவிழும் என உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் பேசுகையில், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே காலகட்டத்தில் சுதந்திரம் பெற்ற நாடுகள் என்றாலும், இரு நாடுகளின் தற்போதைய வளர்ச்சியில் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பலூசிஸ்தானில் நிலைமை கட்டுப்பாட்டை விட்டு விலகுவதாகவும், கைபர் பக்துன்க்வாவில் மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, பொருளாதாரம் மற்றும் சர்வதேச அளவிலான செல்வாக்கு ஆகியவற்றில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவை குறை கூறுவதை விட பாகிஸ்தானை தற்போதைய நிலைக்கு கொண்டு வந்தது யார், தவறான கொள்கைகள் என்ன என்பது குறித்து நாட்டுக்குள் விவாதம் நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, அரசு தற்போதைய அணுகுமுறையிலேயே தொடர்ந்து செயல்பட்டால் அதன் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே ஆட்சி கவிழக்கூடும் என்று எச்சரித்ததாக கூறப்படுகிறது. நான்கு மாகாணங்களிலும் பல்வேறு பிரச்னைகள் இருப்பதாகவும், பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பலூசிஸ்தான், கைபர் பக்துன்க்வா மற்றும் காஷ்மீர் பகுதிகளில் நிலவும் பிரச்னைகளுடன் பணவீக்கம், வேலையின்மை போன்ற பொருளாதாரச் சிக்கல்களும் நாட்டை பாதிப்பதாகக் குறிப்பிட்ட அவர், சுயமாக முடிவெடுக்க முடியாத ஒரு அரசாங்கம் நீண்ட காலம் எவ்வாறு நீடிக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அந்நாட்டு அமைச்சர்களின் இந்த வெளிப்படையான கருத்துகள் பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியல் மற்றும் பொருளாதார நிலை குறித்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
