LATEST NEWS
“பசியோடு இருப்பவன் பிரியாணி வேண்டாம் என்பானா?” திமுக, அதிமுக பெருந்தன்மையுடன் என்னை ஆதரித்தால் ஏற்பேன் – சீமான் அதிரடி..!!
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் பொது வேட்பாளராக நிற்பது குறித்து இதுவரை தாம் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்றும், தம்மைக் கூட்டு வேட்பாளர் அல்லது பொது வேட்பாளர் என்று கிளப்பிவிடுவது தவெக-வினர் தான் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும், தாம் சட்டமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்று பலர் விரும்புவதாகவும், அம்பாசமுத்திரத்தில் போட்டியிடுவதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தேர்தலில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுமே இதுவரை போட்டியிடப் போவதில்லை என்று எந்தவொரு முடிவையும் அறிவிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய சீமான், அவர்களின் ஆதரவு நிலப்பாடு குறித்தும் பேசியுள்ளார். ஒருவேளை அவர்கள் பெருந்தன்மையுடன் தமக்கு ஆதரவு கொடுத்தால், அதை வேண்டாம் என்று எப்படி மறுக்க முடியும் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
தி.மு.க, அ.தி.மு.க ஆதரவளித்தால் அதை ஏற்பேன் என்று குறிப்பிட்ட அவர், அதற்கு உதாரணமாக, “பசியோடு இருப்பவன் பிரியாணி வேண்டாம் என்பானா?” என்ற விசித்திரமான கேள்விய முன்வைத்தார். இரு கட்சிகளும் தமக்கு ஆதரவு தந்தால் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகச் செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் விளக்கமளித்துள்ளார்.
