LATEST NEWS
“நான் தப்பியதே பெரிய விஷயம்.. என் கண்முன்னே அம்மா இறந்தார்…” துர்கா பூஜை பந்தல் நெரிசலில் தாயை இழந்த மகனின் கதறல்..!!
கொல்கத்தாவில் உள்ள சோர்பகன் சர்போஜனின் துர்கா பூஜை பந்தலில் சனிக்கிழமை மாலை திடீரென பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குறித்து சோகமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் தனது தாயை கண் முன்னே இழந்த 25 வயது சோனு பால் என்பவர், அந்த கொடூர நிகழ்வின் போது தம்மைக் காப்பாற்றிக் கொள்ளவும் தாயைக் காப்பாற்றவும் தான் பட்ட போராட்டத்தை விவரித்துள்ளார்.
குமர்துளியைச் சேர்ந்த சோனு பால் தனது தாயுடன் துர்கா பூஜையைக் காணச் சென்றிருந்த போது அங்கு திடீரென மழை பெய்துள்ளது. மழையிலிருந்து தப்பிக்க பந்தலின் நுழைவாயிலில் நின்றுகொண்டிருந்த மக்கள் அனைவரும் உள்ளே செல்ல முண்டியடித்துக் கொண்டு தள்ளியதால், அங்கு கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன் நிலைமை மோசமானது என்று அவர் தெரிவித்தார்.
அந்த கூட்ட நெரிசலின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் அனைவரும் ஒருவரையொருவர் மீது விழுந்ததாக சோனு பால் விவரித்தார். தாமும் கூட்டத்திற்குள் சிக்கிக் கொண்டதாகவும், எப்படியோ போராடி எழுந்து சென்று தனது தாயைக் பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், அந்த துயரச் சம்பவத்தை தன் கண் முன்னே கண்ட அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
