LATEST NEWS
அன்று ரயில் சீட்டுக்கு அடியில் தூங்கிய சிறுவன்… இன்று இந்தியாவின் ‘தங்க நாயகன்’… கபடி வீரர் அஸ்லமின் கண்ணீர் பின்னணி..!!
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆண்கள் கபடி அணி மீண்டும் தங்கம் வென்று அசத்தியுள்ளது. இறுதிப்போட்டியில் ஈரானை 40-34 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இந்தியா தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துக் கொண்ட இந்த வரலாற்று வெற்றியில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் அஸ்லம் இனாம்தார் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளார். கடந்த 2022 ஆசிய விளையாட்டைத் தொடர்ந்து தற்போது 2-வது முறையாகத் தங்கம் வென்று அவர் நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இன்று இந்தியக் கபடியின் ஹீரோவாகத் திகழும் அஸ்லம் இனாம்தாரின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னால் வறுமை நிறைந்த மிகக் கடினமான struggle story உள்ளது. மகாராஷ்டிராவின் கிராமப்புறத்தைச் சேர்ந்த இவர் சிறு வயதிலேயே தந்தையை இழந்ததால், இவரது தாய் பிறர் வீடுகளில் பாத்திரம் கழுவி குடும்பத்தைக் கவனித்துள்ளார். வறுமை காரணமாக அஸ்லமும் தேநீர்க் கடைகளில் டம்ளர் கழுவுவது, கழிவறைகளைச் சுத்தம் செய்வது மற்றும் பழைய பாட்டில்களைச் சேகரித்து விற்பது போன்ற வேலைகளைச் செய்து உணவுக்கான பணத்தைச் சம்பாதித்துள்ளார்.
கபடி மீது கொண்ட ஈடுபாட்டால் வறுமையிலும் பயிற்சியைத் தொடர்ந்த அஸ்லம், உள்ளூர் போட்டிகளில் விளையாடச் செல்லும்போது கையில் பணமில்லாமல் பலமுறை ரயிலில் டிக்கெட் எடுக்காமல் மறைந்து, இருக்கைக்கு அடியில் தூங்கியே பயணம் செய்துள்ளார். புரோ கபடி லீக் தொடர் இவரது வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய நிலையில், இன்று இந்திய அணியின் தவிர்க்க முடியாத ஆல்-ரவுண்டராக உயர்ந்துள்ளார். மாலை முரசு நாளிதழின் தகவல்படி, ஒரு வேளை சாப்பாட்டிற்கே போராடிய ஒரு சிறுவன் இன்று நாட்டின் தங்க நாயகனாக உருவெடுத்துள்ள கதை பலருக்கும் பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது.
