LATEST NEWS
“இனிமேல் அமைதியா இருக்க முடியாது..!” மீண்டும் ஒன்றுகூடும் வேலுமணி – சி.வி.சண்முகம் கூட்டணி.. அதிமுகவில் ஆரம்பமான அதிரடி க்ளைமாக்ஸ்.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் தோல்விகளைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் உட்கட்சி மோதல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சென்னை இல்லத்தில், சி.வி.சண்முகம், பி.தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மற்றும் 25-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்ற ரகசிய ஆலோசனைத் கூட்டம் மூன்றாவது நாளாகத் தொடர்ந்து நீடித்து வருகிறது. 2026 பொதுத் தேர்தலில் அதிமுக பெற்ற படுதோல்விக்கும், தொடர்ந்து முக்கிய எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தவெக-வில் இணைந்ததற்கும் எடப்பாடி பழனிசாமியின் தவறான தலைமையே காரணம் என அதிருப்தி முகாமில் இருக்கும் தலைவர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
கட்சி ஏற்கனவே வெற்றி பெற்றிருந்த தொகுதிகளிலேயே, இடைத்தேர்தலில் அதிமுக 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டது மூத்த நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமியின் அனுமதியின்றி, சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்ததே தவெக 144 இடங்களுடன் ஆட்சி அமைக்கக் காரணமாக இருந்தது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த அதிரடி முடிவைத் தொடர்ந்து சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டதால், அதிமுக அதிகாரப்பூர்வமாக இரு பிரிவுகளாக உடைந்தது.
தற்போதைய ஆலோசனைக் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராகத் தங்களது எதிர்ப்பை எப்படி வெளிப்படுத்துவது என்றும், சட்டமன்றத்தில் தனிக் குழுவாகச் செயல்படுவது குறித்தும் அதிருப்தி அணியினர் தீவிரமாகத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. “இது சாதாரண தோல்வி அல்ல, கட்சியின் வாக்கு வங்கி சரிந்து கொண்டிருப்பதற்கான எச்சரிக்கை” எனச் சி.வி.சண்முகம் எச்சரித்துள்ள நிலையில், இந்த உட்கட்சிப் பூசல் எடப்பாடி பழனிசாமியின் பொதுச்செயலாளர் பதவிக்கு மிகப்பெரிய அரசியல் நெருக்கடியையும் சிக்கலையும் உருவாக்கியுள்ளது.
