LATEST NEWS
“குழந்தை இல்லை… கூடுதல் வரதட்சணை தா..!” கணவர் குடும்பத்தின் கொடுமையால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!!
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கொரட்டகெரே பகுதியைச் சேர்ந்த 25 வயதான காவ்யா என்ற பெண்ணுக்கு, பெங்களூரு புறநகர் நெலமங்களா அருகே சோண்டேகொப்பாவைச் சேர்ந்த நவீன் என்பவருடன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு காவ்யா, தனது கணவர் நவீன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் சோண்டேகொப்பாவில் வசித்து வந்தார்.
திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்காததால் காவ்யா கடுமையான மனவேதனையில் இருந்துவந்துள்ளார். மேலும், குழந்தை இல்லாததை சுட்டிக்காட்டியும், கூடுதல் வரதட்சணை கேட்கும் பொருட்டும் கணவர் நவீனும் அவரது குடும்பத்தினரும் காவ்யாவை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இந்நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவிலும் குழந்தை தொடர்பாக கணவன்-மனைவி இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த காவ்யா, நள்ளிரவில் வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மறுநாள் காலையில் குடும்பத்தினர் பார்த்தபோது காவ்யா தூக்கில் பிணமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து மாதநாயக்கனஹள்ளி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாதநாயக்கனஹள்ளி போலீசார், காவ்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நவீன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுத்த கொடுமையே இந்த துயர சம்பவத்திற்கு காரணம் என காவ்யாவின் பெற்றோர் புகாரளித்துள்ளனர். அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
