CRIME
“என் வீட்டுப் படி ஏறாதேன்னு சொன்னேன்ல..” 12 வயது மகளுக்கு நேர்ந்த கொடுமை.. 58 வயது அண்ணனை ரத்த வெள்ளத்தில் சாய்த்த தம்பி.. நடுங்க வைக்கும் சம்பவம்..!!
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (58). இவரது மனைவி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், குழந்தைகள் இல்லாததால் தனது தம்பி பாலசுப்பிரமணியன் (48) மற்றும் தாயாருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார். பாலசுப்பிரமணியனுக்கு திருமணமாகி 12 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், சங்கர் தனது தம்பியின் சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து அண்ணனிடம் பாலசுப்பிரமணியன் தட்டிக் கேட்காததால், ஆத்திரமடைந்த அவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார். இதன் பின்னர் விழித்துக்கொண்ட பாலசுப்பிரமணியன், அண்ணன் சங்கரை கோயம்பேடு பகுதியில் உள்ள ஆண்கள் தங்கும் விடுதியில் சேர்த்தார்.
இருப்பினும், விடுதியில் இருந்த சங்கர் அடிக்கடி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று பொய் கூறி அத்திப்பட்டு வீட்டிற்கு வந்து, தம்பியின் மகளுக்கு மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அண்ணன்-தம்பி இடையே கடும் பகையாக மாறியதை அடுத்து, சங்கரை திண்டிவனம் அருகே உள்ள அவரது சொந்த ஊரான முருங்கை கிராமத்திற்கு பாலசுப்பிரமணியன் அனுப்பி வைத்தார். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் அத்திப்பட்டு வந்த சங்கர், தம்பியின் வீட்டிற்குச் சென்று சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன், “இனிமேல் என் வீட்டிற்கு வராதீர்கள் அண்ணா, மீறி வந்தால் விபரீதம் ஏற்படும்” என்று அண்ணனை எச்சரித்து அனுப்பியுள்ளார்.
இத்தகைய சூழலில், அண்ணன் சங்கர் மீண்டும் அத்திப்பட்டு பகுதியில் உள்ள தம்பியின் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கோபத்தின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற பாலசுப்பிரமணியன், அண்ணனுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன் வீட்டிற்குள் இருந்த கத்தியை எடுத்து அண்ணன் சங்கரின் வயிறு, மார்பு, கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாகக் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலை செய்த பின்னர் பாலசுப்பிரமணியன் நேராக அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சங்கரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
