LATEST NEWS
“உன் தந்தைக்கு அடுத்து நீதான்…சுட்டுக்கொல்லப்பட்ட பாபா சித்திக்கின் மகனுக்குப் பகீர் மிரட்டல் ஆடியோ..! பதறும் மும்பை..!!”
முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான பாபா சித்திக் கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பை பாந்திரா பகுதியில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான ஜிஷான் அக்தர் என்பவரின் பெயரில் தற்போது ஒரு மிரட்டல் ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதில் பாபா சித்திக்கின் மகனும், எம்.எல்.ஏ.வுமான ஜீஷான் சித்திக்கை மிரட்டும் வகையில், “உன்னுடைய தந்தையை நான்தான் கொன்றேன். இப்போது உனக்கான மரண வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு விட்டது. உன்னுடைய பாதுகாப்பை எவ்வளவு வேண்டுமானாலும் பலப்படுத்திக்கொள். கடந்த முறை நீ அதிர்ஷ்டவசமாக தப்பிவிட்டாய், ஆனால் இந்த முறை எங்களிடம் இருந்து தப்பவே முடியாது” என்று இந்தி மொழியில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆடியோ குறித்து ஜீஷான் சித்திக்கின் சகோதரி பாந்திரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த ஆடியோ பதிவின் உண்மைத்தன்மை என்ன, அது நிஜமாகவே தலைமறைவாக உள்ள குற்றவாளி ஜிஷான் அக்தர் பேசியதுதானா மற்றும் எந்த ஐ.பி முகவரியிலிருந்து பதிவேற்றம் செய்யப்பட்டது என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
