CINEMA
“அப்போவே கொளுத்திப்போட்ட பார்த்திபன்…!””உலகத்திலேயே சிறந்த சி.எம் விஜய் தான்…” அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட் போடுவார்! பார்த்திபன் சொன்ன ‘பகீர்’ உண்மை பலித்ததா…!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், ஒட்டுமொத்த மாநில அரசியலும் அவரை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது. விஜய் சினிமாவில் வளரத் தொடங்கிய காலத்திலேயே அவரை அரசியலுக்கு கொண்டு வருவதற்கான விதையை அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மிக ஆழமாக விதைத்திருந்தார். அதன் நீட்சியாகவே விஜய் ரசிகர் மன்றங்கள் நற்பணி இயக்கமாக உருமாறி, பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வந்தன. இறுதியாகத் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை அவர் தொடங்கியபோது, பல அரசியல் விமர்சகர்கள் இதனால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றே கணித்திருந்தனர்.
ஆனால், தன் மீதும் தன் மக்கள் பலத்தின் மீதும் அசாத்திய நம்பிக்கை கொண்டிருந்த விஜய், ஒவ்வொரு மேடையிலும் “நல்லதே நடக்கும், கான்ஃபிடென்ஸா இருங்க” என்று தன் தொண்டர்களுக்கு ஊக்கமளித்து வந்தார். அவர் கணித்தபடியே, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வென்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸ், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு பெரும்பான்மையை நிரூபித்து, சி.ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். இடதுசாரிகள் அமைச்சரவையில் பங்கேற்காத நிலையில், மற்ற கூட்டணிக் கட்சிகள் தவெக அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளன. இதன் மூலம், தமிழக அரசியல் வரலாற்றில் நீண்ட நாட்களாக விவாதிக்கப்பட்டு வந்த “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” என்ற கோரிக்கை விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு நிஜமாகியுள்ளது.
முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில், முந்தைய அரசின் மகளிருக்கான கலைஞர் உரிமைத் தொகை, நான் முதல்வன் போன்ற முக்கிய மக்கள் நலத்திட்டங்களை எந்தவித தொய்வுமின்றி அவர் செயல்படுத்தி வருகிறார். இருப்பினும், தற்போதைய சூழலில் சட்டம்-ஒழுங்கு விவகாரமே புதிய அரசுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. பெண்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கை முதன்மை முழக்கமாக வைத்தே தவெக தேர்தலைச் சந்தித்த நிலையில், தற்போதைய சூழல் சற்றே கையை மீறிச் செல்வது போல் இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் சில சலசலப்புகள் எழுந்துள்ளன. எனினும், போகப்போக முதலமைச்சர் விஜய் அனைத்தையும் சரிசெய்து விடுவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தவெகவினர் இருக்கின்றனர்.
இப்படியொரு பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற விஜய்யின் ‘மெர்சல்’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில், இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் திடீரென பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. அந்த விழாவில் மேடையில் பேசிய பார்த்திபன், “நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், விஜய்யின் அடுத்த படத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு ட்வீட் போடுவார்… ‘உலகத்தின் மிகச்சிறந்த சி.எம் விஜய்தான்’ என்று ட்ரம்ப் ட்வீட் செய்யப்போகிறார்” என தீர்க்கதரிசனமாக குறிப்பிட்டிருந்தார். பார்த்திபன் அன்று விளையாட்டாகப் பேசிய விஷயம், இன்று விஜய் நிஜமாகவே சி.எம் ஆகியிருப்பதன் மூலம் அப்படியே பலித்திருப்பதைப் பார்த்து நெட்டிசன்கள் பலரும் வியந்து அந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.
