LifeStyle
ஆரம்பத்தில் அறிகுறி தெரியாது….! இந்த மாற்றங்களை அலட்சியப்படுத்தாதீங்க…! 2040-க்குள் உயிரைப் பறிக்கும் 5-வது முக்கியக் காரணி… பகீர் ஆய்வுத் தகவல்….!!
உலகளவில் பெரியவர்கள் மத்தியில் மிகத் தீவிரமாகப் பரவி வரும் நாள்பட்ட சிறுநீரக நோயானது, வரும் 2040-ஆம் ஆண்டிற்குள் மனிதர்களின் உயிரிழப்பிற்கு ஐந்தாவது முக்கியக் காரணியாக உருவெடுக்கக் கூடும் என ‘தி லான்செட்’ ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. ரத்தத்தில் உள்ள கழிவுகளைச் சுத்திகரிப்பதுடன், ரத்த அழுத்தம் மற்றும் சிவப்பணுக்கள் உற்பத்தியைச் சீராக வைக்கும் முக்கியப் பணிகளைச் செய்யும் இத்தகு சிறுநீரகங்களின் செயல்பாடு குறையும்போது, ஆரம்பக் கட்டங்களில் எவ்விதப் பெரிய அறிகுறிகளும் தென்படுவதில்லை.
குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் நிலவும் முறையற்ற வாழ்வியல் மாற்றங்கள், உடற்பயிற்சியின்மை, துரித உணவுகள், மற்றும் உப்பு, சர்க்கரை, கொழுப்பு நிறைந்த உணவு முறைகள் சிறுநீரகங்களுக்குக் கூடுதல் அழுத்தத்தை உண்டாக்குகின்றன. அத்துடன் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் இதயப் பாதிப்பு உள்ளவர்களுக்கும், முதியவர்களுக்கும் இந்த நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே, கைகள், கால்கள் அல்லது கண்களைச் சுற்றிலும் ஏற்படும் வீக்கம், சிறுநீர் கழிப்பதில் உண்டாகும் மாறுபாடுகள், நுரைத்த சிறுநீர், தொடர் சோர்வு, பசியின்மை, வாயில் உலோகச் சுவை மற்றும் தசைப்பிடிப்பு போன்ற எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகிப் பரிசோதிப்பது அவசியமாகும்.
தற்காலத்தில் புழக்கத்தில் உள்ள இ-ஜிஎப்ஆர் (eGFR), அல்புமினூரியா போன்ற மேம்பட்ட சோதனைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களின் உதவியோடு இந்நோயை ஆரம்பக் காலத்திலேயே கண்டறிந்து சிறுநீரக ஆரோக்கியத்தைக் காக்க முடியும். நோயை எவ்வளவு விரைவாகக் கண்டறிகிறோமோ அவ்வளவு நல்லது என்பதால், முக்கியமாகச் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தப் பாதிப்பு உள்ளவர்கள் தங்களது சிறுநீரகங்களை வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
