LATEST NEWS
புதுசா குழந்தை பிறந்திருக்கா…? அப்போ உடனே இந்த வேலையை முடிங்க… தங்கு தடையின்றி கிடைக்கும் இலவச மருத்துவ வசதி…!!
மத்திய அரசின் “ஆயுஷ்மான் பாரத்” காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள குடும்பத்தினர் ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவச் சிகிச்சை பலன்களைப் பெற முடியும். இத்திட்டத்தின் கீழ் ஒருமுறை கார்டு பெற்றுவிட்டால் அதில் புதிய பெயர்களை இணைக்க முடியாது என்ற தவறான கருத்து மக்களிடையே நிலவுகிறது.
ஆனால், குடும்பத்தில் புதிதாகத் திருமணம் செய்து வந்த மருமகள் அல்லது புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பெயர்களை இதில் மிக எளிதாகச் சேர்த்துக்கொள்ள முடியும். இதற்குப் புதிய மருமகளின் பெயர் எனில் திருமணச் சான்றிதழ், கணவரின் ஆயுஷ்மான் அட்டை மற்றும் விடுபட்ட ஆவணங்கள் தேவைப்படும். குழந்தைகளுக்கு எனில் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோரின் மருத்துவ அட்டை அவசியமாகும்.
இணையதளம் வழியாகப் புதிய பெயர்களைச் சேர்க்க, முதலில் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் சென்று (beneficiary.nha.gov.in) மொபைல் எண் மற்றும் ஓடிபி (OTP) மூலம் உள்நுழைய வேண்டும். அதில் உள்ள ‘Add Member’ எனும் ஆப்ஷனைத் தேர்வு செய்து, புதிய உறுப்பினரின் முழு விவரங்களையும் பதிவிட்டு, அவர்களின் அங்கீகாரத்தை ஓடிபி அல்லது கைரேகை மூலம் சரிபார்க்க வேண்டும்.
ஆன்லைன் தவிர்த்து உங்களுக்கு அருகிலுள்ள பொதுச் சேவை மையங்கள் (CSC) அல்லது அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் உள்ள ‘ஆயுஷ்மான் மித்ரா’ உதவியுடனும் இந்தச் சேர்க்கையை மேற்கொள்ளலாம். அவசரக் காலங்களில் பண நெருக்கடியின்றிச் சிறந்த மருத்துவமனைகளில் ரொக்கமில்லா உயர்தரச் சிகிச்சையைப் பெற இந்தத் திட்டத்தில் உடனே பெயர்களை இணைப்பது அவசியமாகும்.
