LATEST NEWS
மதம் மாறினால் இடஒதுக்கீடு கிடையாதா..? பாஜக அஜெண்டாவுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் தவெக… நீதிமன்ற தீர்ப்பால் தமிழக அரசியலில் வெடித்த புது சர்ச்சை..!!
இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஒரு நபர், தனது பழைய பிற்படுத்தப்பட்டோர் சமூகத்திற்கான இடஒதுக்கீட்டு உரிமையைக் கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அண்மையில் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பானது தமிழ்நாட்டின் நீண்டநெடிய சமூகநீதி வரலாற்றிற்கும், முத்தமிழறிஞர் கலைஞர் இஸ்லாமியர்களுக்கு வழங்கிய இடஒதுக்கீட்டு உரிமைக்கும் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவு என்று திமுக சிறுபான்மையினர் நலப்பிரிவுச் செயலாளர் சுபேர்கான் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச்சுதந்திரத்திற்கு எதிராக இத்தீர்ப்பு அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் தற்போதைய தவெக அரசின் நிர்வாகக் குளறுபடிகளும், சட்ட ரீதியான அலட்சியமுமே இத்தகைய தீர்ப்பு வரக் காரணம் என்று திமுக குற்றம் சாட்டியுள்ளது. தமிழக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரைகளையும், வரலாற்றுத் தரவுகளையும் நீதிமன்றத்தில் வலுவாகச் சமர்ப்பிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது. மேலும், இந்த வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றக் கோராமல் தவெக அரசு மௌனம் காத்தது, சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாஜகவின் பலிபீடத்தில் ஏற்றி வைப்பதற்குச் சமம் என்று சுபேர்கான் சாடியுள்ளார்.
ஒருவர் மதம் மாறுவதால் அவரின் ஆன்மீக நம்பிக்கை மாறலாமே தவிர, அவர் தலைமுறை தலைமுறையாக அனுபவித்து வந்த சமூக மற்றும் கல்விப் பின்னடைவு மாறிவிடாது என்ற யதார்த்தத்தை தவெக அரசு நீதிமன்றத்தில் நிலைநிறுத்தவில்லை. மதம் மாறினால் இடஒதுக்கீடு பறிபோகும் என்ற பயத்தை உருவாக்கி, பாஜகவின் மறைமுக ‘மதமாற்ற தடைச்சட்ட’ திட்டத்திற்கு தவெக அரசு சிவப்புக் கம்பளம் விரிப்பதாக திமுக விமர்சித்துள்ளது. கடந்த காலத்தில் ஜெயலலிதா கொண்டு வந்த மதமாற்ற தடைச்சட்டத்தை முறியடித்தது போல, தற்போதும் சமூகநீதியை நிலைநாட்டி உரிமைகளை மீட்கும் வரை திமுக தொடர்ந்து போராடும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
