LATEST NEWS
இனி எல்லாம் ஈஸியா? மருத்துவத் தேவைகளுக்கு வருகிறது ‘நலம்AI’ வாட்ஸ்அப் சேவை!.. அரசு அதிரடி டிஜிட்டல் மாற்றம்!
தமிழக மக்களின் மருத்துவத் தேவைகளை விரைவாகவும் எளிமையாகவும் பூர்த்தி செய்யும் நோக்கில், ‘நலம்AI’ என்ற புதிய வாட்ஸ்அப் (96192 22999) சேவையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. அருண்ராஜ் அவர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடங்கி வைத்துள்ளார். முதற்கட்டமாக 22 மாவட்டங்களில் அமலுக்கு வந்துள்ள இந்த வசதியின் மூலம், பொதுமக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தங்களது மருத்துவப் பரிசோதனை முடிவுகள், மருத்துவர் அளித்த பரிந்துரைச் சீட்டுகள் மற்றும் அருகிலுள்ள சுகாதார நிலையங்கள் போன்றவற்றை எளிதாக அறிந்துகொள்ள முடியும். மேலும், ராஜீவ் காந்தி மருத்துவமனையின் நுரையீரல் பிரிவில் புறநோயாளிகள் முன்-பதிவு செய்யும் வசதியும் இச்செயலி வழியாகக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம், நோயாளிகள் மருத்துவமனையில் நீண்ட நேரம் காத்திருப்பது தவிர்க்கப்படுவதோடு, படிப்படியாக இந்த வசதி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
மருத்துவக் கட்டமைப்பு மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் மற்றொரு நடவடிக்கையாக, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட நிதியிலிருந்து சுமார் 63.48 லட்சம் ரூபாய் செலவில் 20 படுக்கைகள் கொண்ட புதிய அதிதீவிர சிகிச்சைப் பிரிவு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிப்பறைகளின் தூய்மையைக் கண்காணிக்க ‘My Hospital’ என்ற செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கழிப்பறைகளில் ஒட்டப்பட்டுள்ள கியூ.ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, தூய்மை குறைபாடு குறித்து நேரடியாகப் புகாரளிக்கலாம். இந்தத் தகவல்கள் உடனுக்குடன் மருத்துவக் கல்லூரி முதல்வரின் கவனத்திற்குச் சென்று, உடனடியாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
