CRIME
மகன் வீட்டிற்கு உணவருந்த வராத தந்தை.. தேடிச் சென்ற குடும்பத்தினருக்குக் காத்திருந்த அதிர்ச்சி… அல்வாரை உலுக்கிய கொடூரக் கொலை..!!!
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள கதானா பகுதியில் தனியாக வசித்து வந்த 80 வயதான தினேஷ் சந்திர அகர்வால் என்ற முதியவர், அவரது வீட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இவர் வழக்கமாகத் தன் மகனான விகாஸ் அகர்வால் வீட்டிற்குச் சென்று இரவு உணவு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால், வியாழக்கிழமை இரவு அவர் வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரது வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, முதியவர் கை, கால்கள் கட்டப்பட்டு, முகம் மூடப்பட்ட நிலையில் அறையில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இக்கொலைச் சம்பவத்தின் போது அவரது வீட்டில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு, பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. வீட்டில் வைக்கப்பட்டிருந்த பல லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். உயிரிழந்த தினேஷ் சந்திர அகர்வால் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் தொழிலில் ஈடுபட்டு வந்ததால், வழக்கமாகவே அவரது வீட்டில் கணிசமான தொகையை வைத்திருப்பார் என்பதை அறிந்த மர்ம நபர்கள், வீட்டின் பின்பக்க கதவு வழியாக உள்ளே நுழைந்து இப்பெரும் கொள்ளையையும் கொலையையும் அரங்கேற்றியுள்ளனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் முதியவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து கொலை மற்றும் கொள்ளை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் திகாராம் ஜுல்லி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகக் குற்றம் சாட்டி, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
