CRIME
பிஞ்சு உடல்களில் இரும்பு கரண்டி சூடு, எலும்பு முறிவு..! தெலுங்கானாவில் பெற்ற பிள்ளைகளையே நரக வேதனைக்குள்ளாக்கிய தம்பதி..! பின்னணி என்ன..?
தெலுங்கானாவின் சூர்யாபேட்டை பகுதியில் தங்களது இரண்டு குழந்தைகளை இரும்பு கம்பியால் அடித்தும், சிகரெட்டால் சுட்டும் கொடுமைப்படுத்திய தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். லாரி ஓட்டுநரான ரவி மற்றும் அவரது மனைவி இந்து என்பவர்களே இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் ஆவர். தனுஷ் மற்றும் ரேவந்த் ஆகிய தங்களது இரு மகன்களையும் அவர்கள் வீட்டில் வைத்து தொடர்ந்து சித்திரவதை செய்து வந்துள்ளனர்.
குழந்தைகளின் அலறல் சத்தத்தையும், அவர்களின் உடலில் இருந்த காயங்களையும் கவனித்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். குழந்தைகள் நல அமைப்புகளின் உதவியுடன் மீட்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 2 வயது குழந்தைக்கு மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதுடன், இரு குழந்தைகளின் உடலிலும் இரும்பு கரண்டி மற்றும் சிகரெட்டுகளால் சுடப்பட்ட தழும்புகளும், பிராண்டிய காயங்களும் நிறைந்து காணப்பட்டன.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ரவி மற்றும் இந்து ஆகிய இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பதும், இந்த குழந்தைகள் தங்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு தடையாக இருப்பதாக அவர்கள் கருதியதும் தெரியவந்தது. அந்த ஆத்திரத்தில் தான் குழந்தைகளை இப்படி சித்திரவதை செய்ததாக தம்பதியினர் ஒப்புக்கொண்டுள்ளனர். தற்போது அவர்கள் மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட குழந்தைகள் சூர்யாபேட்டையில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
