அதிமுக டூ தவெக… “யாருடைய கட்டாயமும் இல்லை.. நாங்களாகத்தான் விலகினோம்..!”சபாநாயகரிடம் 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அதிரடி விளக்கம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அதிமுக டூ தவெக… “யாருடைய கட்டாயமும் இல்லை.. நாங்களாகத்தான் விலகினோம்..!”சபாநாயகரிடம் 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அதிரடி விளக்கம்..!!

Published

on

அதிமுகவிலிருந்து விலகி, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேர் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட தகுதிநீக்க மனுக்கள் குறித்த விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ளது. கடந்த மே 13 அன்று நடைபெற்ற தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அதிமுக கொறாடாவின் உத்தரவை மீறி 25 எம்எல்ஏக்கள் ஆதரவாக வாக்களித்தனர். அதில் 21 பேர் மீண்டும் அதிமுகவிற்கே திரும்பியதால் அவர்கள் மீதான நடவடிக்கைகள் கைவிடப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வமாகப் பதவி விலகி தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏக்களான எஸ். ஜெயக்குமார், பி. சத்தியபாமா, மரகதம் குமரவேல் மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய நால்வர் மீதான தகுதிநீக்க நடவடிக்கை மட்டும் தொடர்ந்து நிலுவையில் உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் முன்னிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் ஆஜராகி தங்களது விளக்கங்களை எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பித்துள்ளனர். ஏற்கனவே கடந்த வாரம் இசக்கி சுப்பையா விளக்கம் அளித்திருந்த நிலையில், எஞ்சிய மூவரான ஜெயக்குமார், சத்தியபாமா மற்றும் மரகதம் குமரவேல் ஆகியோர் ஆஜராகி இரண்டாவது முறையாக விளக்கமளித்தனர். அப்போது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த சமயத்தில் அதிமுக கொறாடா யார் என்பதில் பெரும் குழப்பம் நீடித்ததால் கட்சியின் வழிகாட்டுதல் இன்றி வாக்களித்ததாகவும், அதன் பின்னர் யாருடைய வற்புறுத்தலும் இன்றி தங்களின் சொந்த விருப்பத்தின் பேரிலேயே எம்எல்ஏ பதவிகளைத் தன்னிச்சையாக ராஜினாமா செய்ததாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Advertisement

குதிரை பேரம் மூலம் எம்எல்ஏக்கள் இழுக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் புகார் அளித்துள்ள சூழலிலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலும் சபாநாயகரின் இந்த விசாரணை அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. முன்னாள் எம்எல்ஏக்கள் அளித்த இந்த அதிகாரப்பூர்வ விளக்க அறிக்கைகள் அனைத்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பேரவைத் தலைவர் தரப்பில் சமர்ப்பிக்கப்பட உள்ளன. இந்த விளக்கங்களின் அடிப்படையில், அடுத்தகட்டமாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் எடுக்கப்போகும் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in