LATEST NEWS
“சொத்தை பிடுங்கிட்டு பெத்தவங்கள தொரத்துறீங்களா?” பிள்ளைகளுக்கு கொடுத்த சொத்தை பெற்றோர்கள் திரும்ப பெறலாம்.. தொழிலதிபரை அலறவிட்ட மும்பை உயர்நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு..!!
பெற்றோர்கள் தங்களை வயதான காலத்தில் கவனித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் தங்களது பிள்ளைகளுக்கு எழுதிக்கொடுத்த சொத்துக்களை, அவர்கள் தங்களைக் கவனிக்கத் தவறினால் மீண்டும் திரும்பப் பெறலாம் என்று மும்பை உயர்நீதிமன்றம் ஒரு அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான அஸ்வின் ரமேஷ் சோனி என்பவர், லோயர் பரேல் பகுதியில் உள்ள வீட்டைத் தனது பெற்றோர் தனக்கு எழுதிக் கொடுத்த பிறகு, அவர்களை அந்த வீட்டை விட்டே வெளியேற்றியுள்ளார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த முதியோர் பராமரிப்புத் தீர்ப்பாயம், அந்த வீட்டை மீண்டும் பெற்றோரிடமே ஒப்படைக்க வேண்டும் என்று அஸ்வினுக்கு உத்தரவிட்டது.
தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தொழிலதிபர் அஸ்வின் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை மும்பை உயர்நீதிமன்றத்தின் தற்காலிகத் தலைமை நீதிபதி ரவீந்திர வி. குகே மற்றும் நீதிபதி கௌதம் ஏ. அன்காத் ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது. மேலும், தீர்ப்பாயத்தின் உத்தரவை முழுமையாக உறுதி செய்த நீதிபதிகள், பெற்றோர் பொருளாதார ரீதியாகத் தனித்து வாழும் வசதி படைத்தவர்களாக இருந்தாலும் கூட, தங்களைக் கவனிக்காத பிள்ளைகளுக்கு அவர்கள் தானமாக வழங்கிய சொத்துப் பத்திரத்தை ‘பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம்-2007’-ன் கீழ் ரத்து செய்ய முழு அதிகாரம் உண்டு என்று தங்களது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளனர்
