CRIME
நான்கே மாதத்தில் முடிந்த கல்யாண வாழ்க்கை..! மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு… இறுதிச்சடங்கில் கலங்கிய கணவனின் பகீர் பின்னணி..!!
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், திருமணமான நான்கே மாதங்களில் கள்ளக்காதலிக்காக மென்பொருள் பொறியாளர் ஒருவர் தனது மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலங்கானாவைச் சேர்ந்த அவினாஷ் நார்னே என்பவருக்கும், ராஜிதா சபினேனி என்பவருக்கும் கடந்த 2025 ஜூன் மாதம் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு ராஜிதா டெக்சாஸிலிருந்து தன் கணவருடன் வாழ்வதற்காக சியாட்டில் பகுதிக்குக் குடிபெயர்ந்தார். இந்த நிலையில், தங்களது அடுக்குமாடி குடியிருப்பில் ராஜிதா மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.
ஆரம்பத்தில் ராஜிதா தவறுதலாகக் குளியலறையில் சிக்கிக் கொண்டு சுயநினைவின்றி உயிரிழந்ததாகக் கூறி அவினாஷ் நாடகமாடியுள்ளார். ஆனால், பிரேதப் பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதோடு, கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே இந்தியாவில் உள்ள தனது கள்ளக்காதலிக்கு, ராஜிதாவின் இறந்த உடலைப் புகைப்படம் எடுத்து அவினாஷ் அனுப்பியதும் காவல்துறை விசாரணையில் அம்பலமானது. இந்த கொடூரக் கொலை வழக்கில் அவினாஷ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக, தன் கணவர் அவினாஷ் தயாரித்துக் கொடுத்த ‘ஸ்மூத்தி’ இருமல் மருந்து போல மிகவும் கசப்பாக இருந்ததாக ராஜிதா தனது தோழிக்கும், கணவனுக்கும் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதன் மூலம் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ராஜிதா இறந்த பிறகு, எந்தவொரு பதற்றமும் காட்டாமல் அவரது இறுதிச் சடங்குகளை அவினாஷே முன்னின்று நடத்தியுள்ளார். இதனால் அவர் மீது யாருக்கும் சந்தேகம் வராத நிலையில், காவல்துறையின் தீவிர விசாரணையில் அவரது உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
