LATEST NEWS
“பணம் கொடுப்பது மட்டுமல்ல… இதுவும் ஒரு வகை லஞ்சம் தான்!”.. முதல்வர் விஜயை கிழித்து தொங்கவிட்ட நயினார் நாகேந்திரன்.. பரபரக்கும் அரசியல்..!!
கோவை பீளமேட்டில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கரூரில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 3,085 ஏக்கர் கோயில் நிலங்களை, ஒரே நாளில் தனியாருக்குப் பட்டா போட்டுக் கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்து கோயில்களின் நிலங்களை அழிப்பதற்காகவே முதலமைச்சர் விஜய் இதைச் செய்துள்ளாரா எனக் கேள்வி எழுப்பினார். மேலும், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கியதை விமர்சித்த அவர், சீனியாரிட்டி அடிப்படையில் தகுதியான பலருக்கு வேலை தராமல், தன் கூட்டத்திற்கு வந்து இறந்தவர்களுக்கு மட்டும் வேலை தருவது ஒரு வகையான லஞ்சமே என்றும், கரூரில் முதலமைச்சர் விஜய் பேசியதை அரசுப் பள்ளிகளில் ஒளிபரப்பியதும், பள்ளிக்கு விடுமுறை விட்டதும் மாணவர்களைத் தவறான வழிக்குக் கொண்டு செல்லும் செயல் என்றும் வன்மையாகக் கண்டித்தார்.
மத்திய அரசின் மானிய விலை உரங்களைத் திரவ வடிவில் மாற்றி கேரளாவுக்குக் கடத்துவதாக எழுந்துள்ள புகார்கள் குறித்தும், அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தின் இறுதி அறிக்கை வந்த பின்னரும் விரிவாகப் பேசப்படும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் தனது அரசியல் நிலைப்பாடுகளை அடிக்கடி மாற்றிக் கொள்வதாகச் சாடிய அவர், 2029 நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்த கட்சிகளும் பாஜகவை மட்டுமே தங்களின் ஒரே எதிரிக் கட்சியாகப் பார்ப்பதிலிருந்தே, பாஜகவைக் கண்டு அனைவரும் பயப்படுவது தெளிவாகத் தெரிகிறது என்றும் கூறினார். இந்த விவகாரங்களை முழுமையாக ஆய்வு செய்த பின்னர், கோயில் நிலங்களை மீட்கவும், தமிழக அரசின் தவறான கொள்கைகளை எதிர்க்கவும் பாஜக சார்பில் நிச்சயமாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
