CRIME
ஹாஸ்பிடல் பெயரில் வந்த பார்சல்… உள்ளே இருந்ததை பார்த்து மிரண்டு போன தாம்பரம் போலீஸ்…! அடுத்து நடந்த அதிரடி ட்விஸ்ட்..!!!
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத போதைப்பொருள் புழக்கத்தை ஒடுக்கும் நோக்கில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மேற்கு தாம்பரம் முடிச்சூர் சாலையில் உள்ள ஒரு தனியார் கூரியர் நிலையத்திற்கு, ஒரு மருத்துவமனையின் பெயரில் சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்று வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தாம்பரம் போலீசார், அந்த பார்சலை வாங்க வந்த குரோம்பேட்டை லட்சுமிபுரத்தைச் சேர்ந்த லீஸ்ரீ என்பவரை மடக்கிப் பிடித்து சோதனையிட்டனர். அப்போது அந்த பார்சலில் அரசால் தடை செய்யப்பட்ட 1,100 ‘Tapentadol’ போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் மற்றொரு அதிரடி நடவடிக்கையாக, சிங்கப்பெருமாள் கோவில் காவல் நிலைய போலீசார் நடத்திய சோதனையில் காசிமேடு காவல் நிலையத்தின் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான செந்தில் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு கார், 5 கிலோ கஞ்சா மற்றும் 60,000 ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட லீஸ்ரீ மற்றும் செந்தில் ஆகிய இருவர் மீதும், போதைப்பொருள் மற்றும் மனநிலை மாற்றும் பொருட்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். நகரில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் இத்தகைய தீவிர நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தாம்பரம் மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.
