CRIME
பழிக்குப்பழியா..? வாலிபர் கொலை வழக்கின் பின்னணி என்ன..? தப்பியோடிய 3 குற்றவாளிகளுக்கு நெல்லை போலீஸ் வலைவீச்சு..!!
நெல்லை நகர் பாறையடி பகுதியைச் சேர்ந்த ஆவுடையப்பன் என்ற வாலிபர், தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், திடீரென அவரை வழிமறித்து தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் உடல் முழுவதும் பலத்த காயமடைந்த ஆவுடையப்பன், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த நெல்லை டவுன் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்ற முயன்றனர். ஆனால், கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி ஆவுடையப்பனின் குடும்பத்தினரும், உறவினர்களும் உடலை எடுக்க விடாமல் போலீசாரை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த கொடூரக் கொலை சம்பவம் முன்விரோதம் காரணமாக அரங்கேறியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இக்கொலை வழக்கில் தப்பியோடிய அந்த மூன்று மர்ம நபர்களையும் பிடிப்பதற்காக போலீசார் தீவிர வலைவீசித் தேடி வருகின்றனர்.
