CRIME
“விசாரணையா? அத்துமீறலா?”.. பெண் படுக்கையறைக்குள் நுழைந்த போலீஸ்.. ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!
நாக்பூரைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவரின் வீட்டில், கார் விபத்து வழக்குத் தொடர்பாகப் புகுந்த போலீசார், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவரது படுக்கையறைக்கே சென்று மிரட்டல் விடுத்ததுடன், மொபைல் போனைப் பறிமுதல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் கிளை, விசாரணை என்ற பெயரில் தனிமனித சுதந்திரத்திற்குள் அத்துமீறுவதை ஏற்க முடியாது எனத் தெரிவித்து, காவல்துறையின் அராஜகப் போக்கைக் கண்டித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஊர்மிளா ஜோஷி பால்கே, நிவேதிதா மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, விசாரணையைக் காரணம் காட்டி சட்டத்தை மீற போலீசாருக்கு எந்த உரிமையும் இல்லை என்றும், புலனாய்வு அமைப்புகள் எப்போதும் சட்ட வரம்பிற்குள் மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21-ன் படி, ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ள தனிமனித சுதந்திரம் மற்றும் வாழும் உரிமையைப் போலீசாரால் பறிக்க முடியாது என்றும், இந்தச் செயல் அந்தப் பெண்ணின் கண்ணியத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். எனவே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மராட்டிய அரசு 2 மாதத்திற்குள் ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அந்தத் தொகையைத் தவறு செய்த போலீஸ் அதிகாரியிடம் இருந்தே நேரடியாக வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். பணத்தால் இழந்த கண்ணியத்தை மீட்டெடுக்க முடியாது என்றாலும், இந்த நடவடிக்கை போலீசாருக்குச் சட்டப்படிதான் நடக்க வேண்டும் என்பதற்கான நினைவூட்டலாக அமையும் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
