LATEST NEWS
“வெளியே ஒரு முகம்… உள்ளே ஒரு முகமா.. தவெக அரசுக்கு இது அடுக்குமா?”.. முதல்வர் விஜய்யை வச்சு செஞ்ச நயினார் நாகேந்திரன்.. பரபரக்கும் அரசியல் களம்..!!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் வழியாக கூடுதலாக 54 நிறுவனங்களின் புதிய மது வகைகளை விற்பனைக்குக் கொண்டுவர அரசு முடிவெடுத்துள்ளதாக வரும் தகவல்களுக்கு, பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்து வருகிறோம் என முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு விளம்பரம் தேடிக் கொள்கிறது. ஆனால், நிஜத்தில் புதிய மது வகைகளை அறிமுகம் செய்து மக்களைப் போதைக்கு இரையாக்கப் பார்ப்பது வேதனையளிக்கிறது” என்று சாடியுள்ளார். மேலும், தமிழகத்தில் தற்சமயம் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பலவற்றிற்கும் மதுவும் போதையுமே முக்கியக் காரணியாக இருக்கின்றன. எனவே, ஒரு பொறுப்பான அரசு போதைப்பொருள் புழக்கத்தைத் தடுத்து நிறுத்தப் பாடுபட வேண்டுமே ஒழிய, மதுவின் ரகங்களை அதிகப்படுத்தி அதை ஊக்குவிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வெளியூர்களுக்குச் சென்றால் மட்டுமே கிடைக்கக்கூடிய குறிப்பிட்ட வகை மதுபானங்கள் அனைத்தும், இனி கைக்கு எட்டும் தூரத்திலேயே கிடைக்கும் என்ற நிலையை உருவாக்குவது இளைஞர்களிடையே குடிப்பழக்கத்தை மேலும் அதிகரிக்கும் என நயினார் நாகேந்திரன் எச்சரித்துள்ளார். அதிக தேர்வுகள், அதிக வாய்ப்புகள் என்ற ஆபத்தான நிலையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், டாஸ்மாக் கடைகளில் புதிய மதுபானங்களை அறிமுகம் செய்யும் திட்டம் இருந்தால் முதல்வர் விஜய் அதை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், அரசு விளம்பரங்களை விடுத்து, முடிந்தவரையில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்து தமிழகத்தில் மதுவிற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் ஆளும் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
