LATEST NEWS
“நீட் ரிசல்ட் வந்துடுச்சா?.. மாணவர்களே பயப்படாதீங்க, நாங்க இருக்கோம்!”.. தமிழக அரசு கொண்டு வந்த ஸ்பெஷல் ரூட்..!!
2026-27ம் கல்வியாண்டிற்கான நீட் இளநிலை தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகி உள்ள நிலையில், மாணவர்களின் மனநலம் மற்றும் மன உறுதியைக் காக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசின் “நட்புடன் உங்களோடு” திட்டத்தைப் பயன்படுத்துமாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 21-ஆம் தேதி நடைபெற்ற இத்தேர்வில் நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற நிலையில், தற்போது 11.21 லட்சம் தேர்வர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதில் பஞ்சாப்பைச் சேர்ந்த ஆர்யன் குப்தா மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த பன்சுல் பன்சால் ஆகியோர் 720க்கு 715 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
தேர்வு முடிவுகளால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் குழப்பங்களில் இருந்து மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் மீட்கும் நோக்கில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. இதற்காக, மனநல மருத்துவர்கள் மற்றும் தொழில்முறை மனநல ஆலோசகர்கள் மூலம் தொலைபேசி வழியாகத் தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, தேவையுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எவ்வித தயக்கமும் இன்றி 14416 அல்லது 104 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு இந்த இலவச மனநல ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தன் அறிக்கையில் அன்போடு கேட்டுக் கொண்டுள்ளது.
