LATEST NEWS
கோடிகளில் சம்பளம் வாங்கினாலும்… ‘பட்ஜெட்’ போடத் தெரியலனா இதுதான் நிலைமை..! வைரலாகும் IIT பட்டதாரியின் கதை..!!
ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் ஐஐடி பட்டதாரி ஒருவருக்கு, வருமான வரித் தாக்கல் செய்யும்போது நிலுவையில் உள்ள ரூ. 15,000 வரியைச் செலுத்தக் கூட கையில் பணமில்லாமல் கடன் வாங்கிய விசித்திரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டி வரும் இவர், சொந்தமாக 3 வீடுகளையும் வைத்துள்ளார். இவ்வளவு வசதிகள் இருந்தும், இந்த இளைஞருக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி குறித்து பட்டயக் கணக்காளர் பிரதிபா கோயல் என்பவர் தனது ‘X’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கணக்காளர் பிரதிபா, அந்த ஐஐடி பட்டதாரியிடம் நிலுவையில் உள்ள ரூ.15,000 வரியைச் செலுத்துமாறு கூறியபோது, அவரிடம் அப்போது கையில் ரொக்கம் இல்லாததால், அடுத்த மாதம் சம்பளம் வந்த பிறகு ஆகஸ்ட் மாதத்தில் ஐடிஆர் தாக்கல் செய்யுமாறு கோரியுள்ளார். ஆனால், ஜூலை 31 காலக்கெடுவைக் கடந்தால் கூடுதல் வட்டியும் அபராதமும் செலுத்த வேண்டிவரும் என்று கணக்காளர் எச்சரித்த பிறகு, அபராதத்தைத் தவிர்ப்பதற்காக வேறு வழியின்றி அவர் யாரிடமோ ரூ.15,000 கடன் வாங்கி அந்த வரியைச் செலுத்தியுள்ளார்.
இந்த பதிவு இணையத்தில் வெளியானதும் சமூக வலைதளப் பயனர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. எவ்வளவு பெரிய படிப்பைப் படித்திருந்தாலும், கோடிகளில் சம்பாதித்தாலும் முறையான நிதி மேலாண்மை மற்றும் வரவு-செலவுத் திட்டம் இல்லையென்றால், இறுதியில் கடன் வாங்கும் நிலைக்குத் தான் தள்ளப்படுவோம் என்பதற்கு இந்தச் சம்பவமே சான்று என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
