LATEST NEWS
அடக்கடவுளே..! ஒரே நொடியில் பறிபோன உயிர்..! தொண்டையில் சிக்கிய பிளாஸ்டிக் பந்து… 5 வயதுச் சிறுவன் பரிதாபப் பலி..!!
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் ஹுன்சூர் தாலுகாவில், சிப்ஸ் பாக்கெட்டுக்குள் பரிசாகக் கிடைத்த சிறிய பிளாஸ்டிக் பொம்மை பந்தை விழுங்கிய முகுந்த் மயூர் என்ற 5 வயது சிறுவன் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தான். முன்னாள் கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர் கௌரம்மா – சங்கர் நாயக் தம்பதியின் பேரனும், சந்தோஷ் – ஐஸ்வர்யா தம்பதியின் ஒரே மகனுமான அச்சிறுவன், கடையில் வாங்கிய சிப்ஸ் பாக்கெட்டைத் திறந்து சாப்பிட்டுள்ளான். அப்போது அதற்குள் இருந்த சிறிய அளவிலான பிளாஸ்டிக் பந்தை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அதை வாயில் போட்டு விழுங்கியதாகக் கூறப்படுகிறது.
அந்தப் பிளாஸ்டிக் பந்து சிறுவனின் தொண்டைப் பகுதியில் பலமாகச் சிக்கிக் கொண்டதால், கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே பதறிப்போன குடும்பத்தினர் தொண்டையில் சிக்கிய பந்தை எடுக்க முயன்றும் முடியாததால், அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து ஹுன்சூர் ஊரகக் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மைசூருவின் ஹுன்சூர் பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த மார்ச் மாதம், இதே தாலுகாவில் உள்ள தொட்டஹெஜ்ஜூர் கிராமத்தில் 6 மாதக் குழந்தையான சின்மய் கவுடா, பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த காய்ந்த செம்பருத்திப் பூவை விழுங்கியதால் மூச்சுத்திணறி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, சிப்ஸ் மற்றும் பலகாரப் பாக்கெட்டுகளில் வரும் சிறிய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் விளையாட்டுப் பொம்மைகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது பெற்றோர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
