LATEST NEWS
பரந்தூர் திட்டத்துக்காக இவங்க கதறுகிறார்களே ஏன் தெரியுமா..? உண்மையை போட்டுடைத்த அமைச்சர் நிர்மல்குமார்… பயங்கர அதிர்ச்சியில் திமுக மாஜிக்கள்…!!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது தொடர்பாக, ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே கடுமையான காரசார விவாதம் வெடித்தது. அவையில் பேசிய தவெகவின் சட்டத்துறை அமைச்சர் சி.டி.நிர்மல் குமார், “பரந்தூரில் 90 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டுவிட்டதாகத் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஆனால், உண்மையில் அங்கு வெறும் 48 சதவீத நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறி முந்தைய திமுக அரசின் வாதத்தை மறுத்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், இந்தத் திட்டத்திற்காகச் சபையில் அதிகமாகக் குரல் கொடுத்துக் கதறுபவர்கள், குறிப்பிட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ‘ஜி ஸ்கொயர் மாப்பிள்ளைக்காகவும்’, தங்களின் கருப்புப் பணத்தை அங்கு முதலீடு செய்தவர்களுக்காகவும்தான் பேசுகிறார்கள் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அமைச்சரின் இந்தத் தனிப்பட்ட விமர்சனம் அவையில் இருந்த திமுக உறுப்பினர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதற்கு உடனடியாக எழுந்து ஆவேசமாகப் பதிலடி கொடுத்த திமுக மூத்த உறுப்பினர் தங்கம் தென்னரசு, “நாங்களும் அதே நாணயத்தில் திருப்பிப் பதிலளிக்க முடியும்” என்று எச்சரித்தார். மேலும், “நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள்? அப்படியென்றால், தற்போது எந்த ‘லாட்டரி மாப்பிள்ளைக்காக’ புதிய விமான நிலையத் திட்டத்தை உருவாக்கப் போகிறீர்கள் என்று நான் கேட்கவா?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். இந்த ‘மாப்பிள்ளை – மருமகன்’ மோதலால் சட்டப்பேரவையில் இரு தரப்பிற்கும் இடையே கடுமையான சலசலப்பும், வார்தைப் போரும் மூண்டுள்ளது.
