LATEST NEWS
“நான் தலித் என்பதால் பழிவாங்குகிறார்கள்” பதவியை ராஜினாமா செய்த கர்நாடக அமைச்சர் பி. நாகேந்திரா பரபரப்பு குற்றசாட்டு..!!
கர்நாடக மாநிலத்தின் மகரிஷி வால்மீகி பழங்குடியினர் மேம்பாட்டுக் கழக நிதி முறைகேடு வழக்கில் எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அம்மாநில அமைச்சர் பி. நாகேந்திரா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆரம்பத்தில் இந்த விவகாரத்தால் 2024-ல் பதவியை இழந்தவர், பின்னர் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட நிலையில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தொடர் எதிர்ப்பால் மீண்டும் ராஜினாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
பதவி விலகல் குறித்துப் பேசிய நாகேந்திரா, “வால்மீகி கழகப் பணப் பரிவர்த்தனைகளில் எனது கையெழுத்து எங்கேனும் இருக்கிறதா? வங்கிகள் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு என்னை எப்படிப் பொறுப்பாக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தான் தலித் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் மட்டுமே அரசியல் உள்நோக்கத்துடன் தொடர்ந்து இலக்கு வைக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
பாஜகவினர் “மனுவாதி” மனநிலையுடன் செயல்படுவதாகவும், தன்னைப்போன்ற தலித் தலைவர்கள் அரசியலில் வளர்வதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் நாகேந்திரா சாடியுள்ளார். தினந்தோறும் தன் மீது பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், இத்தகைய அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் பதவி விலகும் முடிவை எடுத்ததாகக் கூறினார்.
