CRIME
அடக்கடவுளே… ஒரு ஐபோனுக்காக இப்படியெல்லாமா செய்வாங்க..?! சொந்த தாத்தா வீட்டிலேயே ரூ.6.72 லட்சம் நகையைச் சூறையாடிய பேரன்… இன்னொரு பக்கம் காதலிக்கு iPhone கிஃப்ட் கொடுக்க 12 கிலோ கஞ்சா கடத்திய காதலன்… மகாராஷ்டிரா & தெலங்கானாவை உலுக்கிய பகீர் சம்பவம்..!!
விலையுயர்ந்த ஐபோன் வாங்குவதற்காக இளைஞர்கள் குற்றங்களில் ஈடுபடும் இரு அதிர்ச்சி சம்பவங்கள் மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நடந்துள்ளன. ஐபோன் மீதுள்ள மோகம் காரணமாக நிகழ்ந்த இந்த குற்றச்சம்பவங்கள் காவல்துறையினரையே வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
முதல் சம்பவம் மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டம் கனக்வாடி பகுதியில் நடந்துள்ளது. ஆகஸ்ட் 20-21 தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில், பந்து போத்லே என்பவரது வீட்டில் பூட்டை உடைத்து 52 கிராம் எடையுள்ள ரூ.6.72 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்டன. இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தியதில், புதிய ஐபோன் வாங்க ஆசைப்பட்ட போத்லேவின் சிறுவயது பேரனே தனது நண்பர்களான குண்வந்த் மற்றும் சூராஜ் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் சொந்த தாத்தா வீட்டிலேயே இந்தத் திருட்டை செய்தது தெரியவந்தது. நகைகளை விற்க முயன்றபோது சிறுவனையும் அவனது நண்பன் குண்வந்தையும் காவல்துறையினர் கைது செய்தனர்; மற்றொருவன் தப்பி ஓடிவிட்டான்.
இரண்டாவது சம்பவம் தெலங்கானாவின் கம்மம் மாவட்டம் வயரா பகுதியில் நடந்துள்ளது. அங்குள்ள சைதன்யா என்ற இளைஞன், தனது காதலி ஹேமலதாவின் பிறந்தநாளுக்கு ஐபோன் பரிசளிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தான். அதற்கான பணத்தைப் பெற, ஒடிசா சென்று 12 கிலோ கஞ்சா வாங்கி தனது காதலியுடன் பைக்கில் திரும்பும்போது காவல்துறையினரிடம் சிக்கினான். வாகனத்தை ஏற்றி தப்ப முயன்ற போதிலும், காவல்துறை இருவரையும் கைது செய்து கஞ்சாவையும் பைக்கையும் பறிமுதல் செய்தது. போலி கௌரவம் மற்றும் ஆடம்பர ஆசையால் இளைஞர்களின் வாழ்க்கை சீரழிவதை இச்சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
