LATEST NEWS
“நள்ளிரவில் நடந்த அநியாயம்…!” பாலியல் தொல்லையிலிருந்து பெண்ணைக் காத்த நாய்கள்… பதறிப்போய் ஓடோடி வந்த தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்..!!
கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் நள்ளிரவில் தனியாக அமர்ந்திருந்தபோது, அவ்வழியாக வந்த சிறுவன் ஒருவன் அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளான். இந்த மனிதநேயமற்ற செயலைக் கண்டு அங்கிருந்த தெரு நாய்கள் ஆக்ரோஷமாகக் குரைத்து அந்தச் சிறுவனைப் பாய்ந்து விரட்டின. நாய்களின் தாக்குதலுக்குப் பயந்து அந்தச் சிறுவன் அங்கிருந்து தப்பியோட, தெரு நாய்களின் துரிதமான செயலால் அந்த இளம் பெண் அதிர்ஷ்டவசமாகப் பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்திய போலீசார், அத்துமீறலில் ஈடுபட்டது அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என்பதையும், அவன் போதைப்பொருளுக்கு அடிமையான நிலையிலேயே இந்த வக்கிரச் செயலில் ஈடுபட்டுள்ளான் என்பதையும் கண்டறிந்து அவனைக் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்திய நிலையில், பாதுகாப்பற்ற சூழலில் தவித்த அந்த இளம்பெண்ணின் நிலையறிந்து கவுண்டம்பாளையம் தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் உடனடியாக களத்தில் இறங்கினார்.
போலீசார் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகளின் உதவியுடன், உறவினர்களின் சம்மதத்தோடு அந்தப் பெண்ணை மீட்டு பத்திரமாக மனநல காப்பகத்தில் சேர்த்து மருத்துவ உதவிகளை உறுதிசெய்த எம்எல்ஏ-வின் இச்செயலுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதனிடையே, அந்த காப்பகத்தில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வரும் அப்பெண்ணின் தம்பி, தனது சகோதரியைக் கண்டு உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிப் பேசியது அங்கிருந்த அனைவரையும் வேதனையிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.
