LATEST NEWS
“சிறையிலேயே இறந்துவிடுவாரோன்னு பயமா இருக்கு” இம்ரான் கானை மீட்க ஆஸ்திரேலியாவின் 7 கேப்டன்கள் ஒன்று திரண்டு வெளியுறவு அமைச்சருக்கு அவசரக் கடிதம்..!
பாகிஸ்தானின் ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான இம்ரான் கானின் உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்து, ஆஸ்திரேலியாவின் 7 முன்னாள் கேப்டன்கள் அந்நாட்டு வெளியுறவு அமைச்சருக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளனர். பாகிஸ்தான் அரசுடன் தூதரக ரீதியாகப் பேசி அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வாங்குக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த கூட்டு மனிதாபிமானக் கடிதத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றின் முக்கிய ஜாம்பவான்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த அவசரக் கடிதத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன்களான கிரெக் சேப்பல், ஆலன் பார்டர், ஸ்டீவ் வா, இயன் சேப்பல், மார்க் டெய்லர், கிம் ஹியூஸ் மற்றும் மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் பெலிண்டா கிளார்க் ஆகிய 7 பேரும் இணைந்து கையெழுத்திட்டுள்ளனர். இந்த முயற்சியை முன்னெடுத்துள்ள கிரெக் சேப்பல், இது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் பென்னி வாங்கை நேரில் சந்தித்துப் பேசுவதற்கும் நேரம் கேட்டுள்ளார். தங்களது இந்த தலையீடு முற்றிலும் மனிதாபிமானம் சார்ந்தது என்றும், இம்ரான் கானின் அரசியல் அல்லது சட்டப் போராட்டங்களுடன் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இது குறித்து கவலை தெரிவித்துள்ள கிரெக் சேப்பல், “இம்ரான் கான் சிறையிலேயே இறந்துவிடுவாரோ என்று நாங்கள் மிகவும் அஞ்சுகிறோம்” என பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். 1992-ல் பாகிஸ்தான் அணிக்கு உலகக் கோப்பை வென்று தந்து, பின்னர் ஏழை எளிய மக்களுக்காகப் புற்றுநோய் மருத்துவமனைகளையும் கட்டிய ஒரு மாபெரும் தலைவருக்கு, சிறையில் அடிப்படை மருத்துவ வசதிகள் மற்றும் குடும்பத்தினரைச் சந்திக்கும் உரிமை கூட மறுக்கப்படுவதாக வரும் செய்திகள் வேதனை அளிப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அரசியல் காரணங்களைத் தாண்டி, ஒரு சக மனிதனாக அவருக்கு உரிய மனிதாபிமான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 73 வயதான இம்ரான் கானின் உடல்நிலை, சிறைத்துறையின் மருத்துவ அலட்சியம் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் மற்றும் சர்வதேச அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஏற்கனவே இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் கபில்தேவ், சுனில் கவாஸ்கர் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் மைக்கேல் ஹோல்டிங், பிரையன் லாரா உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் பாகிஸ்தான் அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தனர். அந்தத் தொடர் முயற்சிகளின் அடுத்தகட்டமாக, தற்போது ஆஸ்திரேலியாவின் 7 முன்னாள் கேப்டன்களும் ஒன்று திரண்டு ஆஸ்திரேலிய அரசிடம் முறையிட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
